×

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் கொடூரத் தலைவன் பாக்தாதியை போட்டு தந்தவருக்கு 177 கோடி பரிசு: பழிக்குப் பழியாக குழி பறித்தான்

நியூயார்க்: ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அல் பாக்தாதிக்கு கூடவே இருந்து குழி பறித்த ரகசிய உளவாளிக்கு, அமெரிக்கா 177.5 கோடியை பரிசாக அளித்துள்ளது. அது, யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக்’ என்ற தனது அமைப்பின் பெயரை கடந்த 2013ம் ஆண்டு, ‘ஐஎஸ்ஐஎஸ்’ என மாற்றி கொண்டு, உலகையே அச்சுறுத்தி வரும் மிகப்பெரிய தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக இருந்தவன் அபுபக்கர் அல் பாக்தாதி. சிரியாவின் முக்கிய பகுதிகளையும், ஈராக்கின் சில பகுதிகளையும் கைப்பற்றி வலம் வந்தான். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்த, பிணை கைதிகளை கழுத்தறுத்து கொல்வது, கொடூரமான முறையில் மரண தண்டனை,  பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற கொடூர தண்டனைகளை அளித்து, அவற்றை வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிடுவதை அவன் வழக்கமாக கொண்டிருந்தான். தனக்கு எதிராக செயல்படும் பல்வேறு நாடுகளின் தலைவர்களை மிரட்டியும் ஆடியோ, ஆடியோ கேசட்டுகளை வெளியிடுவான்.

இந்நிலையில், ஐஎஸ் இயக்கத்தை அழிக்க அமெரிக்க அரசு தீவிரமாக களமிறங்கியது. இதை அறிந்த பாக்தாதி, கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்தான். இவனை பற்றிய துப்பு கொடுத்தால் 177 கோடியே 50 லட்சம் சன்மானம் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்தது. இதற்கிடையே, சிரியாவில் பாக்தாதி தங்கியிருக்கும் இடம் குறித்த ரகசிய தகவலை ரகசிய உளவாளி ஒருவன் அமெரிக்காவுக்கு தெரிவித்தான். இதைத் தொடர்ந்து, மோப்ப நாயுடன் 8 ஹெலிகாப்டர்களில் சென்ற கே-9 அதிரடிப் படையினர், இட்லிப் மாகாணத்தில் பரிஷா கிராமத்தில் பதுங்கி இருந்த பாக்தாதியை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க, தனது 3 மகன்களுடன் ரகசிய குகைக்குள் ஓடிய பாக்தாதியை அமெரிக்க ராணுவத்தின் மோப்ப நாய் வேகமாக துரத்தி சுற்றி வளைத்தது. அதன் ஆக்ரோஷத்தையும், ஆவேசத்தையும் கண்ட பாக்தாதி, அதனிடம் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்தான். மற்றொரு புறம், குகையும் அதற்கு மேல் செல்லவில்லை. அதோடு முடிந்திருந்தது. அமெரிக்க வீரர்களும் வேகமாக வந்தனர்.

இதனால், உயிர் பயத்தில் மகன்களை கட்டியணைத்தப்படி கதறி அழுத பாக்தாதி, அமெரிக்க வீரர்களிடம் சரணடைய விரும்பாமல் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். அதில், தனது 3 மகன்களையும் கொன்று விட்டு, தானும் உடல் சிதறி இறந்தான். பாக்தாதியின் உள்ளாடைகளை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தி இறந்தது அவன் தான் என்று அமெரிக்கா உறுதி செய்தது. அதன் பிறகே, அமெரிக்க அதிபர் டிரம்ப் இதனை உலகிற்கு தெரியப்படுத்தினார்.
அதோடு, பாக்தாதியை ‘போட்டுக் கொடுத்த’ உளவாளிக்கும், ஏற்கனவே அறிவித்தப்படி 177 கோடியே 50 லட்சம் பரிசுப் பணத்தை அமெரிக்கா கொடுத்துள்ளது. ஆனால், அது யார் என்ற விவரத்தை அது வெளியிடவில்லை.

இருப்பினும், இந்த உளவாளி பாக்தாதிக்கு மிக அருகில் இருந்து, அவனுடைய ஒவ்வொரு நடமாட்டத்தையும் துல்லிமாக கண்காணித்து வந்துள்ளான். இவனுடைய குடும்பத்தை சேர்ந்த ஒருவரை பாக்தாதி உத்தரவுப்படி ஐஎஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொன்றுள்ளனர். அதற்கு பழிவாங்க காத்திருந்த உளவாளிக்கு, பாக்தாதி தங்கியிருந்த வீட்டின் சுற்றுச்சுவரை கட்டிக் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை பயன்படுத்தி, பாக்தாதி இருக்கும் இடத்துக்கு அருகே அடிக்கடி சென்று, அந்த வீட்டின் வடிவமைப்புகளை மெதுவாக கண்டுபிடித்து, அமெரிக்க ராணுவத்துக்கு உளவு கூறி வந்துள்ளார். இறுதியில் அவர் கொடுத்த துல்லியமான கடைசி நேர தகவல், பாக்தாதியின் கதையை முடித்து விட்டது.


Tags : Baghdadi ,IS , IS terrorist, leader of the movement, Baghdadi
× RELATED தேர்தல் பத்திரங்கள் திட்டம் உலகின்...