×

சுஜித் மரணத்தில் எழுந்துள்ள கேள்விக்கு பதில் சொல்லாமல் பதுங்க முடியாது: அனைத்தும் பொய் என கடந்து போகக் கூடாது முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: சுஜித் மரணத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு உரிய பதில் சொல்லாமல் முதல்வர் பதுங்கிக் கொள்ள முடியாது-கோபத்தின் உச்சத்தில் இருக்கும் மக்களின் கேள்விகளுக்கு மனசாட்சியுடன் பதில் சொல்லியே ஆக வேண்டும். இதற்கும்,  “அனைத்தும் பொய்” என ஒரே போடாகப் போட்டுவிட்டு கடந்து போகக் கூடாது என, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: “ஆழ்துளைக்  கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித்தை மீட்பதில் ஏன் அதிமுக அரசு மெத்தனம் காட்டியது” என பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் நான் கேள்வி கேட்டால், முதல்வர் பழனிசாமி கோபப்படுகிறார்.“ஸ்டாலின் என்ன  விஞ்ஞானியா?” என்று அர்த்தமற்ற கேள்வியைக் கேட்கிறார்.

தனது தோல்வியை மறைக்க தவியாய்த் தவிக்கிறார். நான் ஒன்றும் ஒரு விஞ்ஞானியின் கோணத்தில் கேள்வி கேட்கவில்லை. சாதாரண அறிவு கொண்ட சாமானியனாகத்தான் என்னுள் எழுந்த சந்தேகத்தைக் கேட்டேன்.
ஏதோ ஒரு “கற்பனை உலகில்” மிதக்கும் முதல்வரிடமிருந்து உண்மையை எதிர்பார்க்க முடியாது தான். நான் எழுப்பிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளைப்போலவே, ஆங்கில பத்திரிகையில் ஒரு குழந்தையின் உயிரைக் காவு கொடுத்த  தவறுகள்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கட்டுரையில் எழுப்பியுள்ள ஆணித்தரமான கேள்விகளுக்கு முதல்வர் உரிய முறையில் பதில் சொல்வாரா அல்லது அந்தக் குழுமத்தின் மீது எரிந்து விழுவாரா? பத்திரிகையில் வெளிவந்துள்ள  கட்டுரையில், தற்போதைக்கு குறைந்தபட்சமாக 8 கேள்விகள் எழுப்பப் பட்டுள்ளன.

ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்த குழந்தைகளை மீட்கும் அனுபவம் தேசியப் பேரிடர் மீட்புப் படைக்கு இல்லை. எங்களுக்கு இதுதான் முதல் அனுபவம்” என்று அந்தப் படையின் செய்தித் தொடர்பாளரே பேட்டியளித்திருப்பது, மேலும்  அதிர்ச்சியளிக்கிறது. அனுபவம் இல்லாத தேசியப் பேரிடர் மீட்புப் படையை நம்பி அழைத்து, காலத்தை விரயம் செய்ததற்குப் பதிலாக, ராணுவத்தையோ, துணை ராணுவத்தையோ அழைக்காதது அ.தி.மு.க. அரசின் தோல்விதானே? ஆகவே,  முதல்வர் பழனிசாமி நீங்கள், பத்திரிகையில் வெளிவந்துள்ள கட்டுரையின் இந்த முக்கியமான- பொதுநலன் சார்ந்த - அடிப்படையான கேள்விகளுக்கு, முதல்வர் என்ற அளவில் கூட அல்ல - மாநிலப் பேரிடர் ஆணையத்தின் தலைவர் என்ற  முறையில் உங்கள் பதில் என்ன?

மாநிலத்தின்- நாட்டின் - அந்த வீட்டின் எதிர்காலமாக இருந்த சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்பதில் படுதோல்வி கண்டுள்ள தங்களின் பதிலையும் விளக்கத்தையும் அறிந்து கொள்ள நான் மட்டுமல்ல - ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த  சிறுவனைக் காப்பாற்றத் தவறியதில் அதிமுக அரசின் மீது கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தமிழ்நாட்டு மக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். பதில் சொல்வீர்களா, மாநிலப் பேரிடர் ஆணையத் தலைவர் அவர்களே? உரிய பதில்  சொல்லாமல் நீங்கள் பதுங்கிக் கொள்ள முடியாது.நாட்டுமக்களின் - நடுநிலையாளர்களின் மனங்களில் எழுந்திருக்கும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

பதில் சொல்லும்வரை இந்தக் கேள்விகள் உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கும். யார் மீதும் சினம் கொள்ளாமல், குளறுபடிகளுக்கு மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள். “இவை அனைத்தும் பொய்” என்று, ஒரே போடாகப் போட்டுவிட்டு,  கடந்து போக முயற்சி செய்யக்கூடாது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : CM ,Sujith ,death ,MK Stalin , Death of Sujith, CM, MK Stalin
× RELATED தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவு..!!