×

மகனை பள்ளி வேனில் ஏற்றிய சில நிமிடங்களில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை: 4 பேர் கும்பலுக்கு வலை

சென்னை: சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பெரியார் நகர், நேதாஜி தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (32). பிரபல ரவுடி. இவரது மனைவி ஞானச்செல்வி. இவர்களது மகன் ஜெகநாதன் (7). ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில்  2ம் வகுப்பு படித்து வருகிறான். சந்தோஷ்குமார் மீது திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் கொலை, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் சிரஞ்சீவி என்பவரை நண்பருடன் சேர்ந்து வெட்டி கொலை  செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் சந்தோஷ்குமார் தனது மகன் ஜெகநாதனை பள்ளி வேனில் ஏற்றிவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து  கொண்டிருந்தார்.

வீட்டின் அருகே வந்தபோது 4 பேர் கும்பல் திடீரென வழிமறித்து சந்தோஷ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதால் அனைவரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக   சந்தோஷ்குமாரை வெட்டியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத சந்தோஷ்குமார் அவர்களிடம் இருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளார். ஆனால் அந்த கும்பல் அவரை பின்னால் துரத்தி சென்று மீண்டும் வெட்டி உள்ளனர். இதில் அவர் தலை,  கழுத்து, மார்பு, கை உள்பட பல இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள் அலறி துடித்தபடி சிதறி ஓடினர். பின்னர், அந்த கும்பல் சந்தோஷ்குமார் இறந்துவிட்டதாக நினைத்து தப்பி  சென்றது. இதையறிந்த உறவினர்கள், நண்பர்கள் ஓடிவந்து சந்தோஷ்குமாரை மீட்டு ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ்குமார் காலை 11.30 மணி அளவில்  பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்து திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சடலத்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அறிந்த அம்பத்தூர் போலீஸ்  துணை கமிஷனர் ஈஸ்வரன், ஆவடி உதவி கமிஷனர் ஜான்சுந்தர் ஆகியோர் தலைமையிலான போலீசார் வந்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும்,  புகாரின்பேரில் ஆவடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காளிராஜ் தலைமையில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியை சார்ந்த பாம்பு தினேஷ் தலைமையில் 4 பேர் கொண்ட கும்பல் சந்தோஷ்குமாரை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.  ஆவடி சுற்றுவட்டார காவல் நிலைய பகுதியில் பாம்பு தினேஷ் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சந்தோஷ்குமாருக்கும், பாம்பு தினேஷுக்கும் முன்விரோதம்  ஏதேனும் உள்ளதா? அல்லது யார் பெரிய ரவுடி? என்ற  போட்டியில் கொலை சம்பவம் நடந்ததா? என்கிற கோணங்களில் 3 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : school van , Chennai Avadi, son, school van, Rowdy Vettikolai
× RELATED மீஞ்சூரில் 4 வயது சிறுமிக்கு தொல்லை பள்ளி வேன் டிரைவர் கைது