×

6ம் நாளாக டாக்டர்கள் போராட்டம் பணி முறிவு நடவடிக்கை பாயும்: அமைச்சர் எச்சரிக்கை: பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று டாக்டர்கள் அறிவிப்பு

சென்னை: 6ம் நாளாக போராட்டம் நடத்தி வரும் டாக்டர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், பணி முறிவு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்தார். ஆனால், தங்களது பதவியை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யத்  தயார் என்று டாக்டர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் 23 அரசு மருத்துவமனைக் கல்லூரி மருத்துவமனைகள், 32 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 178 வட்ட மருத்துவமனைகள், 1765 ஆரம்ப சுகாதார  நிலையங்கள், 134 நகர சுகாதார நிலையங்கள், 8706 துணை சுகாதார நிலையங்கள், 416 நடமாடும் மருத்துவமனைகள் உள்ளன. தமிழக அரசு மருத்துவமனைகளில் 18,070 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் அரசு  டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அரசாணை 354ல் கூறியுள்ளபடி ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 25ம்  தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை டாக்டர்கள் தொடங்கினர்.

போராட்டத்தை அரசு கண்டுகொள்ளாத நிலையில், 5 டாக்டர்கள் அன்று பிற்பகலில் முதல் சாகும் வரை உண்ணா விரத போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில் திமுக உள்பட எதிர்கட்சிகள் டாக்டர்கள் போராட்டத்துக்கு ஆதரவு  தெரிவித்துள்ளன. இந்நிலையில் டாக்டர்கள் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நடைபெற வேண்டிய அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின்  நிர்வாகிகளை அழைத்து சுகாதாரத்துறை அமைச்சர் பேசி கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்தார். ஆனால் டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர். இதனால் நேற்றும் அரசு  மருத்துமவனைகள் செயல்பாடு முடங்கியது. போதுமான டாக்டர்கள் பணியில் இல்லாத நிலையில், குறைந்த எண்ணிக்கையில் பணிக்கு வந்த டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு பல மடங்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:டாக்டர்கள் கூட்டமைப்பு என்று சொல்லப்படும், அமைப்பை சேர்ந்த டாக்டர்கள் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை  வளாகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.எந்த ஒரு சூழலிலும் அரசு மருத்துவ சேவை தடைபடக்கூடாது என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பல பொது நல வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில்  டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். போராட்டத்தை கைவிட்டால் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருக்கிறோம். மழை காலம், டெங்கு  பரவுகிறது, இந்த சூழ்நிலையில் போராட்டம் தவிர்க்கப்பட வேண்டும். இன்றும் போராட்டம் தொடரும்பட்சத்தில், ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சையை வழங்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.

அதனால் பணிக்கு இன்றும் போராட்டம் நடத்தும் டாக்டர்கள் 7 நாட்களாக தொடர்ந்து பணிக்கு வராததாக கருதி, அவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை எடுக்கப்படும். அதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் உரிய உத்தரவுகளை  பிறப்பித்துள்ளார். அவர்களின் இடங்களுக்கு மாற்று டாக்டர்கள் பணிக்கு நியமிக்கப்படுவார்கள். இணை இயக்குனர்கள் நிலையில் உள்ள டாக்டர்கள் இதை கண்காணித்து இன்று பிற்பகலுக்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள். புதிதாக  பணிக்கு சேர்வதற்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான டாக்டர்கள் எம்ஆர்பி மூலம் விண்ணப்பித்துள்ளனர். டாக்டர்கள் பணிக்கு திரும்பாத சூழ்நிலையில், புதிய டாக்டர்கள் மூலம் அவர்களின் இடங்களை நிரப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். அமைச்சரின் எச்சரிக்கை தொடர்பாக அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர்கள் கூறியதாவது: அரசு மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர்  கூறியுள்ளார். இல்லாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

நாங்கள் ஏற்கனவே வருடம் முழுவதும் பணிசெய்துவிட்டு, 6 மாத சம்பளத்தை தான் பெற்று வருகிறோம். உரிய சம்பளம் பெற வேண்டும் என்பதற்காகவே போராடி வருகிறோம். ஒரு 10 நாட்கள் பணி நீக்கம் செய்யட்டும். அதனால் எங்களுக்கு  எந்த பாதிப்பும் இல்லை. எங்களை பொறுத்தவரை பணிமுறிவு நடவடிக்கை அல்ல, நாங்கள் மொத்தமாக ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால்  டாக்டர்கள் போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதேநேரத்தில் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Tags : strike ,Doctors ,Minister , Doctors struggle, minister, resign, doctors
× RELATED சிவகாசி அருகே சாலை அமைக்க கோரி மக்கள் மறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை