×

நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் 2,455 மில்லியன் கன அடி நீர்: பூண்டி ஏரியில் 1,582 மி.கன அடி இருப்பு

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு, வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில்  பருவமழை துவங்கு முன் நீர் இருப்பின்றி கிடந்தது. இதனை தொடர்ந்து, கடந்த மாதம் 16ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், நான்கு  ஏரிகளின் நீர் இருப்பு 2,455 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. இதில், நேற்று காலை நிலவரப்படி 1,582 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு  1,413 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. இதில், தற்போது 44 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 81 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. புழல் ஏரியின் மொத்த  கொள்ளளவு 3,330 மில்லியன் கன அடி. இதில், நேற்று காலை நிலவரப்படி 708 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 520 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081  மில்லியன் கன அடி. இதில், நேற்று காலை 121 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருந்தது.

ஏரிக்கு வினாடிக்கு 70 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. இவ்வாறு கடந்த சில நாட்களாக பெய்த மழையால், நான்கு ஏரிகளின் முழு கொள்ளளவான 11,057 மில்லியன் கன அடியில், 2,455 மில்லியன் கன அடி நீர் நேற்றைய  நிலவரப்படி இருப்பு இருந்தது. இந்நிலையில், நேற்றும் பகலில் அவ்வப்போது பலத்த மழை கொட்டியது. இதனால் குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்அளவு மேலும் அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : lakes ,catchment area ,Madras ,Poondi Lake , Continuous Rainfall, Madras, Drinking Water, Poondi Lake
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!