×

மாநிலங்கள் 28ஆக குறைந்தது இரண்டாக பிரிந்தது காஷ்மீர்: ஜம்மு, லடாக் கவர்னர்கள் இன்று பதவியேற்பு

ஸ்ரீநகர்: இரண்டாக பிரிக்கப்பட்ட காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களாக இன்று முதல் செயல்பட உள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தது. இரண்டு மாதங்களுக்கு பின்னர், அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக இன்று முதல் செயல்பட தொடங்குகின்றன.  ஜம்மு காஷ்மீரின் உண்மை நிலவரம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதோடு, பொதுமக்களின் கருத்துகளையும் கேட்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த 23 எம்பிக்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழு 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் காஷ்மீர் வந்துள்ளது. இந்த குழு நேற்று முன்தினம் பொதுமக்களை நேரில் சந்தித்து, சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட அனுபவங்களை குறித்து கருத்துக் கேட்டனர்.

இதே நேரத்தில், குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் வெளி மாநிலங்களை சேர்ந்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தீவிரவாதிகளுக்கு
ஐரோப்பிய எம்பி.க்கள் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவிற்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியம் செயல்படும்,’ என்றும் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரானது, இன்று முதல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் என மாறுகின்றன.  ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை உடனான யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019ன் கீழ், ஜம்மு காஷ்மீர் புதிய யூனியன் பிரதேசத்தின் காவல் துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். நிலங்கள், நில மேம்பாடு, விவசாய நிலங்கள், விவசாய கடன் உள்ளிட்டவை தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். லடாக் யூனியன் பிரதேசத்தை பொறுத்தவரை காவல்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, நிலங்கள் உள்ளிட்டவை லெப்டினன்ட்-கவர்னர் மூலமாக மத்திய அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படும்.

மார்க்சிஸ்ட் கண்டனம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாநில மக்கள் அல்லது மாநில சட்டப்பேரவையின் கருத்துக்களை கேட்காமல் ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31ம் தேதி முதல் ஜம்மு காஷ்மீரில் இருந்து லடாக் பிரிக்கப்படுகின்றது. இந்த நாள் இந்திய ஜனநாயகத்தில் அவமானமான ஒரு நாளாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடைசி முதல்வர், கடைசி ஆளுநர்
* ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கடைசி முதல்வராக, மக்கள் ஜனநாயக கட்சியின்  தலைவர் மெகபூபா முப்தி இருந்தார். கடந்த 2017ம் ஆண்டு இவருக்கு அளித்த  ஆதரவை பாஜ திரும்ப பெற்றதால், இவர் பதவியை ராஜினாமா செய்தார். 2017ம் ஆண்டு  ஜூன் மாதம் வரை இவர் முதல்வராக இருந்தார்.
* பின்னர், இங்கு  ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இம்மாநிலத்தின் கடைசி ஆளுநராக  இருந்தவர் சத்யபால் மாலிக். நேற்றுடன் இவரது பதவிக்காலம் முடிந்தது.  இதனால், இவர் கோவா ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.

Tags : Governor ,Kashmir ,Jammu ,Ladakh , States, Kashmir, Jammu, Ladakh, Governors
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...