×

மகாராஷ்டிரா பாஜ எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை குழு தலைவராக பட்நவிஸ் தேர்வு

மும்பை: பாஜ கட்சியின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக(முதல்வர் பதவிக்கான வேட்பாளராக) தேவேந்திர பட்நவிஸ் நேற்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையில் மகாராஷ்டிராவில் புதிய அரசு அடுத்த ஓரிரு நாட்களில் பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ 105 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இந்த கூட்டணிக்கு உள்ள போதிலும், இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கோரி சிவசேனா பிடிவாதம் பிடித்து வருகிறது. இந்த கோரிக்கையை பா.ஜனதா ஏற்றுக் கொள்ள மறுப்பதால் புதிய அரசு அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் என்று சிவசேனாவுக்கு வாக்குறுதி அளிக்கப்படவில்லை என்றும், மீண்டும் தனது தலைமையில்தான் ஆட்சியமையும் என்றும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியில் தானே தொடருவேன் என்றும் தேவேந்திர பட்நவிஸ் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர், பாஜ தேசியத் துணைத் தலைவர் அவினாஷ் ரவி கண்ணா ஆகியோரது முன்னிலையில், சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜ எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது. இதில், கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 105 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாஜ சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேவேந்திர பட்நவிஸ் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் தலையில் காவி நிற டர்பன் அணிந்து கலந்து கொண்ட தேவேந்திர பட்நவிஸ், தன்னை தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த கூட்டத்துக்கு பின்னர் பேட்டியளித்த நரேந்திர சிங் தோமர், ‘‘பாஜ எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பொறுப்புக்கு தேவேந்திர பட்நவிசை தவிர வேறு யாருடைய பெயரும் முன்மொழியப்படவில்லை’’ என்றார்.

முன்னதாக எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் உரையாற்றிய தேவேந்திர பட்நவிஸ் கூறியதாவது; பாஜ தலைமையிலான மெகா கூட்டணி விரைவில் ஆட்சியமைக்கும். ஆட்சியமைக்க மாற்று வழி என்றெல்லாம் ஏதும் கிடையாது. தற்போதுள்ள பாஜ தலைமையிலான கூட்டணியே ஆட்சியமைக்கும். பாஜ-சிவசேனா உள்ளடக்கிய மெகா கூட்டணி ஆட்சிமைக்கத்தான் மகாராஷ்டிரா மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதனால் இந்த கூட்டணியே ஆட்சியமைக்கும். 1995ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் 75 இடங்களை தாண்டவில்லை. ஆனால், 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜ தனித்து போட்டியிட்டு 122 தொகுதிகளில் வென்றது. நடந்து முடிந்த தேர்தலில் 105 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. இது மகாராஷ்டிராவில் பாஜவின் வளர்ச்சியை காட்டுவதாக உள்ளது. இவ்வாறு தேவேந்திர பட்நவிஸ் கூறினார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் 105 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதாவுக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் ஏற்கனவே ஆதரவு அளித்துள்ளனர். இதனால் சட்டப்பேரவையில் அக்கட்சியின் பலம் 110 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ‘ஜன் சுராஜ்ய சக்தி’ கட்சித் தலைவரும் ஷாகுவாடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான வினய் கோரேயும் பாஜ.வுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

அஜித் பவார் தேர்வு
தேசியவாத காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் 54 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக அஜித் பவார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தன்னை தேர்ந்தெடுத்ததற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய அஜித் பவார், ‘‘வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னைகளில் தீவிரமாக செயல்படுவேன்’’ என்று உறுதியளித்தார்.

சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி
மகாராஷ்டிராவில் அமையவிருக்கும் புதிய அரசில் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி மற்றும் 13 அமைச்சர் பதவிகள் வழங்க பாஜ முன்வந்துள்ளது. அதேவேளையில், சிவசேனா எம்.எல்.ஏ.க்களை தனக்கு ஆதரவாக இழுக்கும் தீவிர முயற்சியிலும் பாஜ இறங்கியுள்ளது. சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 56 பேரில் 45 பேருக்கு பாஜ வலைவீசியுள்ளது. இதுபற்றி அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் காகடே நேற்று முன்தினம் கூறுகையில், ‘‘சிவசேனாவை சேர்ந்த 45 எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் மீண்டும் தேவேந்திர பட்நவிஸ் தலைமையில் ஆட்சியமைய வேண்டும் என விரும்புகிறார்கள்’’ என்றார். சிவசேனா எம்.எல்.ஏ.க்களை தங்களுக்கு ஆதரவாக இழுப்பதன் மூலம் உத்தவ் தாக்கரேயை பணியவைத்து மீண்டும் ஆட்சியைமைக்கும் வகையில் வியூகம் வகுத்து பாஜ செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பாஜ.வின் இந்த நடவடிக்கை சிவசேனாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சிவசேனா முன்னிலையில் பாஜ புதிய திட்டம் ஒன்றை வைத்துள்ளது. அந்த திட்டத்தின்படி சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி மற்றும் 13 அமைச்சர் பதவிகள் கொடுக்க பாஜ முன்வந்துள்ளது. இந்த புதிய பார்முலா குறித்த தகவல் உத்தவ் தாக்கரேயின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால், பாஜ.வின் புதிய பார்முலா குறித்து சிவசேனா தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

‘ஏக் துஜே கே லியே’ பட பாடலை பாடிய அமைச்சர்
சிவசேனாவுடனான உறவு குறித்து பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரும், அமைச்சருமான சுதிர் முங்காந்திவர் ‘ஏக் துஜே கே லியே’ படப்பாடலை பாடினார். மும்பையில் நேற்று பேட்டியளித்த சுதிர் முங்காந்திவர், சிவசேனாவுடனான பாஜ.வின் உறவை குறிப்பிடுகையில், ‘‘தேரே மேரே பீச் மே கைசா ஹை யே பந்தன் அன்ஜானா, மைனே நஹி ஜானா, துனே நஹி ஜானா’(நம்மிடையே எந்த மாதிரியான உறவு என்பது எனக்கும் தெரியவில்லை, உனக்கும் தெரியவில்லை) என்ற பாடலை பாடினார். கடந்த 1981ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘ஏக் தூஜே கே லியே’ படப்பாடல் இது. அவர் மேலும் கூறுகையில், ‘‘வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மாநில மக்கள் இந்த தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள். மக்கள் அளித்த தீர்ப்புக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும்’’ என்றார்.


Tags : committee ,meeting ,Maharashtra BJP MLAs ,BJP ,Maharashtra , Bharatiya Janata Party , BJP) , MLAs , Maharashtra
× RELATED பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்