×

25 மாவட்டங்களில் உஷார் நிலை ‘மகா’ புயல் உருவானது: திருவள்ளூர், காஞ்சியில் தொடர்ந்து பலத்த மழை,..அணைகள், ஏரி குளங்களை கண்காணிக்க உத்தரவு

சென்னை: லட்சத்தீவு அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ‘மகா’ புயலாக உருவானது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து 25 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 17ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத் தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுப் பெற்றுள்ளது. இது படிப்படியாக வலுப்பபெற்று தற்போது லட்சத்தீவு அருகே உள்ள கடல்பகுதியில் புயலாக உருவானதுஇதனால் குமரி கடல் பகுதி முதல் சென்னை வரை கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

அதன்படி நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் திருத்தணியில் 111 மி.மீ, புதுச்சேரியில் 88.3 மி.மீ, தூத்துக்குடி, பாளையங்கோட்டை 71 மி.மீ, சென்னை விமானநிலையத்தில் 55 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது தவிர தமிழகத்தின் மழைமானி மூலம் மழை அளவீடு செய்யப்படும், 28 இடங்களிலும் நல்ல மழைபெய்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட தமிழகம் முழுவதும் நேற்று பரவலாக மழை கொட்டியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் விட்டு, விட்டு தொடர்ந்து மழை பெய்த வண்ணம் இருந்தது. நேற்று மாலையில் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. காஞ்சி, திருவள்ளூரில் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியது.

தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கன்னியாகுமரியில் கடுமையான காற்றுடன் கூடிய மழை கொட்டியது. தூத்துக்குடியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு குறுக்குச்சாலை அருகே உள்ள கச்சேரி தளவாய்புரத்தில் உள்ள சின்னப்பரெட்டியார் கண்மாய் உடைந்து, நீர் முழுவதுமாக வெளியேறியது. நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மழை காரணமாக பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து முடங்கியது. சுற்றுலா பயணிகள் நீலகிரியில் தவித்தனர். மலை ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு காரணமாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து புதுவை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் தரைப்பாலத்தை தாண்டி தண்ணீர் சென்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில், அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது. இதற்கு ‘’மகா’’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தீவிர புயலாக வலுப்பெறலாம்: அடுத்த 48 மணி நேரத்துக்கான வானிலை முன்னறிவிப்பாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் கூறியதாவது: அரபிக்கடலில் உருவாகியுள்ள மகா புயலால் தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நேற்று காலை மாலத்தீவுகள் குமரி கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று மதியம் இரண்டரை மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுப்பெற்றது. இது நேற்று மாலை புயலாக வலுப்பெற்றுள்ளது.

மகா என்று பெயரிடப்பட்ட இந்த புயல் தற்போது மினிகாய் தீவு வடகிழக்கு 130 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திற்கு வடமேற்கில் 320 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெற கூடும். வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகலில் லட்சத்தீவு வழியாக கடந்து மத்திய கிழக்கு கடல் பகுதியில் நிலவும் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து  24 மணி நேரத்திற்கு மழை தொடரும்.  
கேரளா கடற்கரைப்பகுதி, கர்நாடக கடற்கரைப் பகுதி, லட்சத்தீவுகள் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இந்த பகுதியில் பலத்த காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். சில நேரங்களில் 85 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும். இவ்வாறு அவர் கூறினார்.

முழு அளவில் உஷார்
எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,  ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, டெல்டா  மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 25 மாவட்டங்களில் மிக கன மழை மற்றும் கன மழை பெய்யும் என்று  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அந்த மாவட்ட நிர்வாகங்கள் முழுமையாக  உஷார் படுத்தப்பட்டுள்ளனர். புதுவையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Kanchi ,districts ,Thiruvallur , 25 Districts, Heavy Storm, Thiruvallur, Kanchi, Heavy Rain, Dams, Lake Ponds
× RELATED தியாகராஜர் கண்ட தெய்வீக தரிசனம்!