×

தமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி சட்டத்தால் விளை நிலங்கள் பறிபோகும் அபாயம் : விவசாய சங்கங்கள் கடும் கண்டனம்

திருச்சி:தமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி சட்டத்தால், விளைநிலங்கள் பறிபோகும் அபாயம் உருவாகியுள்ளதாக பல்வேறு விவசாய சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றம் கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) மசோதாவை கடந்த பிப்ரவரி 14ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் வைத்து அதற்கான ஒப்புதல் பெறப்பட்டது. இந்த சட்டத்திற்கு தற்போது இந்திய குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, கொள்முதலாளர் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் விவசாயிகள் அல்லது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்களது விளை பொருட்கள் அல்லது கால்நடைகள், அல்லது அதிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஒப்பந்தம் செய்த அன்று நிர்ணயம் செய்த விலையிலேயே பரிமாற்றம் செய்வதற்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு இந்த சட்டத்தை இயற்றி உள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு பல்வேறு விவசாய சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்  கூறுகையில், தமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி சட்டம் கார்ப்பரேட்டுகளிடம் விவசாயிகளை அடிமைபடுத்தி விளை நிலங்களை அபகரிக்க வழிவகுக்கும். கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒப்பந்தம் என்ற பெயரில் விளைநிலங்களை மீத்தேன், ஹைட்ரோகார்பன், போன்ற பேரழிவு திட்டங்களுக்கு அபகரிக்க வழிவகுக்கும்.  காப்புரிமை என்ற பெயரில் விவசாயிகளை அடிமைப்படுத்தும். விவசாயிகளின் நிலங்கள் பறிபோகும், ஏற்கனவே குஜராத் போன்ற மாநிலங்களில் சோதனை அடிப்படையில் நடை முறைப்படுத்தப்பட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உருளைகிழங்கு  சாகுபடி செய்த விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்த பெப்சி நிறுவனம் கொள்முதல் காலத்தில் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்ய முயற்சித்தது. இச்சட்டம் குறித்து விவசாயிகளிடம் கருத்துக் கேட்கவில்லை. சட்டமன்றத்திலும் வெளிப்படையாக விவாதித்ததாக தெரியவில்லை. தமிழக அரசு உடன் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி இச்சட்டத்தை  திரும்ப பெற வேண்டும். மறுக்கும் பட்சத்தில் தீவிரமான போராட்டத்தில் களமிறங்குவோம் என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் துரைமாணிக்கம் கூறுகையில், இந்த சட்டத்தால் விவசாயிகள் எதை, எப்போது பயிரிட வேண்டும்? என்பதை கார்ப்பரேட் நிறுவனங்களின் அனுமதியின்றி செய்ய முடியாது. விவசாயிகளின் சுதந்திரம் முழுமையாக பறிக்கப்படும் என்றார்.
தேசிய தென்னிந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு கூறுகையில், இந்த சட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தும். விவசாய பொருட்களுக்கான லாபகரமான விலையை அரசு தான் கொடுக்க வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையில் கூறிருப்பது போல் விவசாயிகளுக்கு லாபகரமான விலையை அரசு ஏற்படுத்தி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இந்த சட்டத்திற்கு பதிலாக அரசே விவசாய உற்பத்தி பொருளுக்கு லாபகரமான விலையை நிர்ணயம் செய்து தரவேண்டும். அதனை விட்டுவிட்டு புதிய சட்டம் என்பது தேவையற்றது என்றார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் (கட்சி சார்பற்றது)  மாவட்ட தலைவர் ம.ப.சின்னதுரை கூறுகையில் எம்.எஸ்.சாமிநாதன் குழு, வைத்தியநாதன் குழு, ரெங்கநாதன் குழு, அர்ஜூன்சென் குழு உள்ளிட்ட 5 குழுக்கள் பரிந்துரை செய்த இயற்கை பேரிடர் காலங்களில் உற்பத்தி செலவு அடிப்படையில் 50% கூடுதல் விலையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளனர். அதனையும் தற்போது வரை அமல்படுத்தவில்லை.  எம்எல்ஏக்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்துவதற்காக குழு அமைத்து உத்தரவிட்டு அந்த பரிந்துரையை அனைவரும் ஏற்று கொள்ளுவதற்கு ஓராண்டு ஆவதற்குள்ளாகவே அதனை நடைமுறைப்படுத்தி விடுகின்றனர். ஆனால் விவசாயிகளுக்கு தேவையான குழு பரிந்துரையை மட்டும் அமல்படுத்துவதில் மெத்தனம் காட்டுகின்றனர். விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டம் தேவையற்றது என்றார்.

Tags : lands ,Government of Tamil Nadu ,Land , Tamil Nadu Government's, Cultivation Laws Risk , Loss of Land
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...