×

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு 2 மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

மதுரை: நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் மாணவர்கள் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா பிடிபட்டார். இதையடுத்து உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் மற்றும் சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பிரவீன் (21), ராகுல் (20), இவர்களின் தந்தை சரவணன் (44), டேவிட் (47), மாணவி பிரியங்கா, இவரது தாய் மைனாவதி மற்றும் தர்மபுரியை சேர்ந்த மாணவர் இர்பான், இவரது தந்தை முகமது சபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ராகுல், பிரவீன், சரவணன், டேவிட், பிரியங்கா, மைனாவதி, இர்பான், முகமதுசபி ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பிரவீன், ராகுல், இவர்களது தந்தை சரவணன், டேவிட் ஆகியோர் ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. மனுக்களை விசாரித்த நீதிபதி, ‘‘மாணவர்கள் முக்கிய குற்றவாளிகள் அல்ல. அவர்களின் நலன் கருதி ராகுல், பிரவீன் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது’’ எனக்கூறி, இவர்களது தந்தை சரவணன், டேவிட் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Neet Exam ,Impersonation Case ,2 Conditional Bail for Students
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...