×

குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி : 10,000 போலீசார் பாதுகாப்பு

சாயல்குடி: தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தலைவர்களின் வருகையையொட்டி 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் 112வது ஜெயந்தி விழா, 57-வது ஆண்டு குருபூஜை விழா கடந்த 28ம் தேதி துவங்கியது. நினைவிடத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகள், திருவிளக்கு பூஜை, லட்சார்ச்சனை நடந்தது. நேற்று முன்தினம் காலை இரண்டாம் நாள் யாகசாலை பூஜை, ஆன்மீக சொற்பொழிவு, பஜனை, கூட்டு பிரார்த்தனையுடன் லட்சார்ச்சனை நடந்தது.
நேற்று காலை 11 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேவர் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், பொன்.முத்துராமலிங்கம், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் சுப.திவாகரன் உட்பட பலர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர், மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தேவருக்காக பல்வேறு பணிகளை திமுக செய்துள்ளது. தேசியத்தையும், தெய்வீகத்தையும் தேவர் திருமகனார் இருகண்களாக பாவித்தார்.

அந்த வழியிலேயே அவர் செயல்பட்டு வந்தார். முக்கியமாக, தமிழக மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார். சுதந்திர போராட்ட நாட்களில் பல நாட்கள் சிறையில் இருந்தவர் தேவர். பசும்பொன் என்றாலே ‘சுத்த தங்கம்’ என்பது பொருள். எனவே, தேவர் நினைவிடத்திற்கு வருவதில் திமுக பெருமை கொள்கிறது’’ என்றார். ‘தேவர் ஜெயந்தி விழா அரசு விடுமுறையாக அறிவிக்கப்படுமா’ என்ற நிருபர்களின் கேள்விக்கு ‘‘நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள், ஆட்சிக்கு வந்தவுடன் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்’’ என்றார். பாஜ சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் காங்கிரஸ், பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் எம்எல்ஏ உட்பட பொதுமக்கள் பலர் மலர் வளையம் வைத்து தேவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் மற்றும்  அரசியல் கட்சி தலைவர்களின் வருகையை முன்னிட்டு பசும்பொன்னில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏடிஜிபி ஜெயந்த் முரளி, தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் 10 ஆயிரம் போலீசார் பசும்பொன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேவர் சிலை முன் தர்ணா: தேவர் குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு நேற்று மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் கூட்டமைப்பினர் மாலை அணிவித்தனர். பிறகு மதுரை விமான நிலையத்திற்கு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார், அருகாமை வணிக வளாக பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இதையும் மீறி, சிறிதுநேரத்தில் தேவர் சிலை பகுதிக்கு வந்து போராட்டத்தை தொடர்ந்தனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டத்திற்குப் பிறகு அவர்கள், பசும்பொன் புறப்பட்டு சென்றனர்.

Tags : MK Stalin ,Pasumpon Devar ,memorial , MK Stalin's tribute , Pasumpon Devar memorial
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...