×

சித்தூர் அருகே போலீசார் அதிரடி ஆந்திர வங்கி கொள்ளையில் நகை மதிப்பீட்டாளர் கைது

* 11 கிலோ தங்க கட்டிகள், 6 கிலோ போலி நகைகள், 2.66 லட்சம் பறிமுதல்

திருமலை : சித்தூர் அருகே ஆந்திர வங்கி கொள்ளை சம்பவத்தில் நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 11 கிலோ தங்க கட்டிகள், 6 கிலோ போலி நகைகள், 2.66 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திராவின் மோர்தனபல்லியில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திரா வங்கி உள்ளது. இந்த வங்கி லாக்கரில் இருந்த 17 கிலோ தங்க நகைகள், 2.66 லட்சம் ரொக்கம், சிசிடிவி கேமராவின் டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டர் ஆகியவை கடந்த 14ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது.இதுகுறித்து யாதமரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வங்கி நகை மதிப்பீட்டாளர் ரமேஷை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் தான் நகை, பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று ரமேஷை கைது செய்தனர்.

இது குறித்து சித்தூர் எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர வங்கியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்த ரமேஷ், பங்குச் சந்தையில் முதலீடு செய்து வியாபாரம் செய்து வந்துள்ளார். ஆனால் அதில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதை சமாளிக்க ரமேஷ் திட்டம் தீட்டி வந்தார். அதன்படி, நகைகளை அடமானம் வைக்க வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களின் பெயரில் போலி  நகைகளை அடமானம் வைத்து 1 கோடியே 30 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். அவ்வாறு கிடைத்த பணம் முழுவதையும் மீண்டும் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார்.கடந்த பிப்ரவரி மாதம் வங்கி மேலாளர் விடுப்பில் சென்றபோது, வங்கியின் லாக்கர் சாவியை ரமேஷிடம் வழங்கி பொறுப்பு மேலாளரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ரமேஷ், வேலூருக்கு சென்று, வங்கி லாக்கர் சாவிகளை கொடுத்து கள்ளச் சாவிகளை தயார் செய்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு வங்கி லாக்கரின் மாஸ்டர் சாவியை கணக்காளர் தனது டேபிள் மீது வைத்துவிட்டு சாப்பிட்டபோது எடுத்து அச்சு தயார் செய்து அதன் மூலம் மாற்று மாஸ்டர் சாவி தயார் செய்துள்ளார். மற்றொரு நாள் மேலாளர், கணக்காளர் இல்லாதநேரத்தில் மாற்று சாவிகள் மூலம் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகள், பணத்தை ரமேஷ் கொள்ளையடித்துச் சென்றார். இவ்வாறு அவர் கூறினார். கைது செய்யப்பட்ட ரமேஷிடமிருந்து வங்கியில் அடமானம் வைத்து 1 கோடியே 30 லட்சம் பெற பயன்படுத்திய 6 கிலோ போலி நகைகள் பறிமுதல் செய்து அதனை போலீசார் காட்சிப்படுத்தினர். மேலும் வங்கியில் இருந்து கொள்ளையடித்த 11 கிலோ தங்க நகைகளை தங்க கட்டிகளாகவும், 2.66 லட்சம் ரொக்கம், 10 லட்சத்து 20 ஆயிரம், கார், 2 பைக்குகள், வங்கி சிசிடிவி கேமரா ரெக்கார்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : robbery ,Chittoor ,Andhra Bank , Andhra Bank robbery
× RELATED சித்தூர் லெனின் நகர் காலனியில் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து