×

தண்ணீரை சேமிக்காவிட்டால் சென்னை, பெங்களூரு நகரம் கேப் டவுன்’ போன்று மாறும் : ஜல்சக்தி அமைச்சர் எச்சரிக்கை

புதுடெல்லி:  ‘‘தண்ணீரை சேமிக்காவிட்டால், சென்னை, பெங்களூரு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் விரைவில் கேப் டவுன்’ நகரை போன்று மாறி விடும்,’’ என்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எச்சரித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் தலைநகரான கேப் டவுன் நகரில் கடந்த 2017-18ம் ஆண்டில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இதையடுத்து, நீர் மேலாண்மை மற்றும் தண்ணீர் பயன்பாடு குறித்து மக்களுக்கு உணர்த்த அங்கு டே ஜீரோ’ அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, அங்குள்ள அனைத்து குழாய்களும் அன்றைய தினம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், தண்ணீரை சேமிக்க வேண்டிய அவசியம் குறித்து மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியதாவது: நகர மயமாக்குதல், மக்கள் தொகை பெருக்கம், நீர் மேலாண்மை பற்றிய போதிய விழிப்புணர்வின்மை ஆகியவற்றால் குளங்கள், ஏரிகள், ஆறுகள் வறண்டு நிலத்தடி நீர் வற்றி வருகிறது. இதனால், மக்கள் குடிநீர் தொட்டிகளை நம்பி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால், சென்னை, பெங்களூரு மட்டுமல்ல; நாட்டின் பல்வேறு பகுதிகள் விரைவில் `கேப் டவுன்’ நகரை போன்றதாகி விடும். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முன்னாள் தலைவர் நீதிபதி சுவதேந்தர் குமார் கூறியதை போன்று, இந்திய மக்கள் ஆறுகளை தெய்வமாக வழிபடுகின்றனர். ஆனால், அதனை அசுத்தப்படுத்துகின்றனர். இந்தியாவில் பெய்யும் 1068 மி.மீ. மழையினால் சராசரியாக 4,000 மில்லியன் கியூபிக் மீட்டர் நீர் கிடைக்கிறது. ஆனாலும், தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. அதே சமயம், ஆண்டு முழுவதும் 100 மி.மீ. மழை பெறும் இஸ்‌ரேல் நாட்டில் அபரிமிதமாக தண்ணீர் உள்ளது. அதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் உரிமைகள் பற்றி அதிகம் பேசும் மக்கள், பொறுப்பை பற்றி பேசுவது கிடையாது.  உலகில் நிலத்தடி நீரை மிகவும் சார்ந்திருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் வெறும் 300 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் மட்டுமே சேமிப்பில் இருக்கிறது என்றார்.

கடல் நீர்மட்ட உயர்வால் 3.6 கோடி பேர் பாதிப்பு


அமெரிக்காவில் நியூ ஜெர்சியை சேர்ந்த காலநிலை விஞ்ஞானி ஸ்காட் குல்ப் தனது ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: `கார்பன் உமிழ்வை குறைக்காவிடில், கடலோர பாதுகாப்பை பலப்படுத்தாவிட்டால், 30 கோடி மக்கள் வசிக்கும் நிலப்பகுதி வரும் 2050ம் ஆண்டிற்குள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. இதன் முந்தைய மதிப்பீடு 8 கோடி என கணக்கிடப்பட்டிருந்தது. புவி வெப்பமயமாதலை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கடல் நீர்மட்ட உயர்வினால், வரும் 2050ம் ஆண்டில், இந்தியாவில் 3.6 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இது 2100ம் ஆண்டில் 4.4 கோடியாக உயரும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Cape Town ,Chennai ,minister ,Bengaluru , save water, Chennai and Bangalore ,Jalsakshi
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை...