×

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ப.சிதம்பரத்துக்கு நவ.13 வரை சிறை : அமலாக்கத்துறை காவலை நீட்டிக்க மறுப்பு

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நவ.13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிபிஐயைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் அவரை கைது செய்து விசாரணை நடத்தியது.  முதலில் கடந்த 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கூடுதலாக 7 நாட்கள் விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி தரப்பட்டது. அதன்படி, ப.சிதம்பரத்தின் காவல் நேற்றுடன் முடிந்தது. இதைத் தொடர்ந்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில், ப.சிதம்பரம் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘ப.சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட காவலை மேலும் ஒருநாள் நீட்டிக்க வேண்டும். இந்த ஒரு நாளை மிகுந்த திறம்பட பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்,’’ என்றார்.

அதற்கு சிதம்பரம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி அஜய் குமார் குஹர் பிறப்பித்த உத்தரவில், ‘‘அமலாக்கத்துறையின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. நவ.13ம் தேதி வரை ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க வேண்டும்,’’ என்றார். இதைத் தொடர்ந்து, ப.சிதம்பரம் மீண்டும் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஐரோப்பிய எம்பிக்கள்: ஐரோப்பிய எம்பிக்களின் காஷ்மீர் பயணம் பற்றி நிருபர்களிடம் கருத்து தெரிவித்த ப.சிதம்பரம், ‘‘அடுத்ததாக நாடாளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக பேசக்கூட அந்த எம்பிக்கள் அழைத்து வரப்படலாம். யாருக்கும் தெரியும்? அதுவும் நடக்கலாம்’’ என்றார்.

வீட்டு உணவு, மருந்துகள் தர அனுமதி


குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாலும், சிறை உணவு ஒத்துக்கொள்வதில்லை எனவும் அவரது தரப்பு வக்கீல் கபில் சிபல் ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனால், ஒருவேளை மட்டும் வீட்டு உணவு தர நீதிமன்றம் அனுமதித்திருந்தது. இதற்கிடையே, கடந்த 28ம் தேதி மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிதம்பரம் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக எய்ம்சில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினமே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், சிதம்பரத்துக்கு இனி 3 வேளையும் வீட்டு உணவு, தேவையான மருந்து, மாத்திரை, தனி சிறை, வெஸ்டர்ன் டாய்லெட் போன்ற வசதிகளை செய்து தர டெல்லி சிபிஐ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இடைக்கால ஜாமீன் மனு இன்று விசாரணை

உடல் நல பாதிப்புகளை காரணம் காட்டி தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் டி.என்.படேல், ஹரி சங்கர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக மூத்த வக்கீல் கபில் சிபல் இம்மனுவை தாக்கல் செய்து, அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்தார். மனுவை பெற்ற நீதிபதிகள், இன்று இந்த வழக்கை உரிய அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என உத்தரவிட்டனர்.

Tags : P Chidambaram ,PI , INX Media Abuse case,PI arrested ,imprisonment till November 13
× RELATED தோல்வி என்பது பிரதமர் மோடிக்கு தான்,...