×

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டம்: தேவைப்பட்டால் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்...அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: தமிழகம் முழுவதும் 23 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 32 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 178 வட்ட மருத்துவமனைகள், 1765 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 134 நகர சுகாதார நிலையங்கள், 8706 துணை   சுகாதார நிலையங்கள், 416 நடமாடும் மருத்துவமனைகள் உள்ளன. தமிழக அரசு மருத்துவமனைகளில் 18,070 டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பெருவாரியானோர் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அரசாணை 354ல்   கூறியுள்ளபடி ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25ம் தேதி முதல் 6 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, நேற்று காலை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள், மூத்த மருத்துவர்கள் பணியை புறக்கணித்தனர். இதனால் அவசர சிகிச்சைப்பிரிவு, விபத்து சிகிச்சைப்பிரிவு, காய்ச்சல் வார்டில் மட்டும்   டாக்டர்கள் பணிக்கு சென்றனர். பிற பிரிவுகளில் டாக்டர்கள் பணிக்கு செல்லவில்லை. டாக்டர்கள் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் நடைபெறவில்லை. தமிழகம் முழுவதும் அரசு   மருத்துவமனைகளில் போதுமான டாக்டர்கள் இல்லாத நிலையில், சில இடங்களில் உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் இறந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. சில இடங்களில் டாக்டர் லீவில் சென்றுள்ளதாக நோயாளிகளை மருத்துவ  பணியாளர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் மருத்துவர்கள் போராட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும்  சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவர்கள் முன்னறிவிப்பின்றி போராட்டத்தில் ஈடுபட்டனர் என்றார்.  நாளை மருத்துவர்கள் பணிக்கு வராவிட்டால் பிரேக்-இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். பிரேக்-இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அரசு மருத்துவர்கள் பணிமூப்பு சலுகை ரத்தாகும் என்றார்.

பணிக்கு வராத மருத்துவர்களின் இடங்கள் காலி என அறிவிக்கப்பட்டு, அந்த பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என்றும் போராட்டத்தை கைவிடாவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், தேவைப்பட்டால் புதிய மருத்துவர்கள்  நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். இதனை தொடர்ந்து, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



Tags : Government doctors ,doctors , Government doctors struggle over 4 demands: new doctors to be appointed if needed ...
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை