×

மேலூர் அருகே குண்டும், குழியுமான சாலை தற்காலிகமாக சீரமைப்பு

மேலூர்: மேலூர் அருகே 3 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை, தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் தற்போதைய மழைக்கு குண்டும் குழியுமாக மாறியது. மக்கள் கோரிக்கையை தொடர்ந்து தற்காலிகமாக சாலை சீரமைக்கப்பட்டது. மேலூர் அருகே அருவிமலையில் இருந்து முத்துகருப்பன்பட்டி வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக 3 மாதங்களுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. 2018-19ம் ஆண்டிற்கான பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ்  இச்சாலை அமைக்கப்பட்டது. இப்பகுதியில் கல்குவாரிகளுக்கு செல்லும் லாரிகள் அதிகளவு சென்று வருவது வழக்கம்.

 இதனால் சாலை அமைத்த சில நாட்களிலேயே லேசாக சேதமடைந்த இச்சாலை தற்போது பெய்து வரும் மழையால் சாலையில் உள்ள தார்கள் அடித்து செல்ல, மிகவும் மோசமாக பல இடங்களில் குண்டும் குழியுமாக மாறி வாகனம் செல்ல  லாயக்கற்றதாக மாறிவிட்டது. இதனால் இச்சாலையில் அதிக விபத்து நடந்து வந்தது. சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறையினர் குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளில் மட்டும் கிராவல் மண்ணை கொட்டி பள்ளத்தை மூடி உள்ளனர். தற்காலிக ஏற்பாடாக இது செய்யப்பட்டுள்ளது. நிரந்தர தீர்வாக பள்ளம் உள்ள பகுதிகளில்  ஜல்லி கற்களால் மூடி தாரை ஊற்றி சரிசெய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : pit road ,Melur ,road ,dump , Temporarily renovating the dump and pit road near Melur
× RELATED தமிழ் தொலைக்காட்சியில் சமஸ்கிருத...