×

விழுப்புரம் மாவட்டத்தில் 3 நாளில் 50 ஆழ்துளை கிணறுகள் மூடல்: கலெக்டர் நடவடிக்கை

விழுப்புரம்: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வேங்கைகுறிச்சி நடுகாட்டுபட்டியில் திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுஜித் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில்  இதுபோன்று 13க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே ஆட்சியர் சுப்ரமணியன் ஊரக வளர்ச்சி, பேரூராட்சி, நகராட்சித்துறை அதிகாரிகள்  ஆலோசனைக்கூட்டத்தில் இதுபோன்ற திறந்தநிலையில் உள்ள ஆழ்துணை கிணறுகளை கண்டறிந்து மூடிவைக்க வேண்டும். குறிப்பாக அரசு அமைத்த போர்வெல்கள் ஒரு இடங்களில் கூட திறந்தநிலையில், பயன்பாடில்லாமல் இருக்கக்கூடாது  என்று உத்தரவிட்டிருந்தார். அதன் எதிரொலியாக 90 சதவீதம் ஆழ்துளை கிணறுகள் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருச்சி சம்பவம் எதிரொலியாக மேலும் ஆட்சியர் ஆழ்துளை கிணறுகள் விவகாரத்தில் அதிகாரிகளை முடுக்கிவிட்டுள்ளார். திருச்சி சம்பவத்தின் மறுநாளே ஊரக வளர்ச்சி, பேரூராட்சி, நகராட்சித்துறை அதிகாரிகளிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு, திறந்த நிலையில் ஆழ்துளை கிணறுகள் இருந்தால் கண்காணிப்பு செய்து அதனை உடனடியாக  மூடிவைக்கவேண்டும். தனிநபர் இடத்தில் இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த 3 நாட்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை அதிகாரிகள் கண்டறிந்து மூடியுள்ளனர். சின்னசேலம் அடுத்த  வடக்கநந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட அக்கராயபாளையம் புதுகாலனி பகுதியில் தெருவில் திறந்த நிலையில் கிடந்த இரண்டு ஆழ்துளை கிணறுகள் உடனடியாக மூடப்பட்டன.

இதேபோன்று அம்மாபேட்டை பகுதியில் 2 திறந்த வெளி ஆழ்துளை  கிணறு, வடக்கநந்தல் பகுதியில் 3 திறந்த வெளி கிணறுகளையும் மூட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் கோலியனூர் ஒன்றியம் மழவராயனூர் மற்றும் காணை, ரிஷிவந்தியம் ஒன்றியம் உள்பட மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் அரசுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை மூடநடவடிக்கை  எடுத்துவருகின்றனர். இப்பணிகளில் கிராமநிர்வாக அலுவலர்கள், உதவியாளர்களும் களமிறங்கியுள்ளனர்.



Tags : district ,Closure ,wells ,Villupuram , Closure of 50 deep wells in Villupuram district in 3 days: Collector action
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...