குழித்துறை நகராட்சி பகுதியில் அங்கன்வாடிகள் பராமரிக்கப்படுமா?...குழந்தைகளின் வருகை குறைந்தது

மார்த்தாண்டம்: குழித்துறை நகராட்சியில் இடைத்தெரு, கழுவன்திட்டை, மார்த்தாண்டம் மார்க்கெட் அருகில், வெட்டுவெந்நி, பந்நியாணி என்று மொத்தம் 5 இடங்களில் அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களை நகராட்சி நிர்வாகம் சரியாக  பராமரிப்பதில்லை. இதனால் அங்கன்வாடி மைய கட்டிடங்கள் மேற்கூரைகள் உடைந்தும், சுவர்கள் விரிசல் விழுந்தும் காணப்படுகின்றன. கழிவறைகள் கூட அசுத்தமாக பாழடைந்த நிலையில் உள்ளன. வளாகம் முழுவதும் புதர்மண்டி விஷ ஜந்துக்களின் கூடாரமாக விளங்கி வருகிறது. இதனால் இங்கு வரும் குழந்தைகள் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.  குறிப்பாக கழுவன்திட்டை, பந்நியாணி பகுதிகளில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்கள் படுமோசமாக பழுதடைந்து காணப்படுகின்றன.

மழை நேரங்களில் மேற்கூரை ஓட்டை வழியாக ஒழுகும் தண்ணீர் குழந்தைகள் மீது பட்டு அவர்களுக்கு காய்ச்சல் உள்பட நோய்களையும் வரவழைத்து விடுகிறது. சரியான அடிப்படை வசதிகள் கூட இங்கு இல்லை. தற்போது அங்கன்வாடி  மையங்களுக்கு குழந்தைகளை அனுப்ப பலர் தயங்குகின்றனர். இதனால் நாளுக்கு நாள் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை நகராட்சி நிர்வாகமும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது விஷயத்தில் தனி கவனம் செலுத்தி அங்கன்வாடி மையங்களை சீரமைக்க வேண்டும். குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

Related Stories: