×

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 13ந் தேதிக்குள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்கவும் குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் ஏ.பி.சாஹி.உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையை ஏற்று ஏ.பி.சாஹி குடியரசுத் தலைவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தார்.

யார் அந்த ஏ.பி.சாஹி ?

*சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள ஏ.பி.சாஹி என்கிற அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

*அங்குள்ள தம்குஹி எனும் ராஜ வம்சத்தில் 1959ம் ஆண்டு ஜனவரி 1ல் பிறந்தார்.கடந்த 1985ல் சட்டப்படிப்பை முடித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக தொழிலை தொடங்கினார்.

*சிவில் மற்றும் அரசியலமைப்பு பிரிவுகளில் நல்ல நிபுணத்துவம் பெற்றவர். பின்னர், 2004 செப்டம்பரில் அலகாபாத் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார். 2005ல் நிரந்தரம் செய்யப்பட்டார்.

*கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாட்னா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக  ஏ.பி.சாஹி பதவியேற்றார். இவர், பாட்னா தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகித்தபோது ஜிபிஎப் ஊழல் வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பளித்தார்.

தஹில் ரமானி ராஜினாமா செய்தது ஏன் ?


சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த தஹில் ரமானியை மேகாலயா தலைமை நீதிபதியாகவும், மேகாலயா தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்க உச்ச நீதிமன்ற  கொலிஜியம் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. நாட்டிலேயே மிகப்பெரிய நீதிமன்றங்களில் ஒன்றான 75 நீதிபதிகள் கொண்ட  சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து தன்னை மிகச்சிறிய 3 நீதிபதிகள் கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ததை மறுபரிசீலனை செய்யுமாறு தஹில் ரமானி உச்ச நீதிமன்ற கொலிஜியத்திற்கு கடிதம் எழுதினார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

குடியரசு தலைவருக்கு பரிந்துரை

இந்நிலையில், மேகாலயா உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து,சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரியை மத்திய அரசு நியமித்தது.கடந்த சில வாரங்களாக தலைமை நீதிபதி இல்லாமலேயே உயர் நீதிமன்றம் செயல்பட்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்ற கொலிஜியம் கடந்த 15ம் தேதி மீண்டும் கூடி விவாதித்தது. அதன் அடிப்படையில், ஆகஸ்ட் 28ம் தேதி செய்த பரிந்துரையை மாற்றி புதிய பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியது. அதில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை நியமனம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்று, ஏ.பி.சாஹியை  தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளார்.

Tags : Ramnath Govind ,AP ,Sahi ,Chief Justice ,Madras High Court , AP Sahi, Supreme Court, President, Ramnath Govind, Chief Justice, Tahil Ramani, Resignation
× RELATED விஜயவாடாவில் மருத்துவக் கிடங்கில்...