×

மகாராஷ்டிரா பாஜக சட்டமன்றக் குழுத்தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு : சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்போம் என உறுதி

மும்பை : மகாராஷ்டிரா பாஜக சட்டமன்றக் குழுத்தலைவராக ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பையில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக - சிவசேனா இடையே இழுபறி


மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகியும், ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக - சிவசேனா இடையே இழுபறி நீடித்து வருகிறது. மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பா.ஜ., - சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ., 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அடுத்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு, அந்த கூட்டணிக்கு எளிதாக கிடைத்தது. இந்த நிலையில், முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவை பங்கீடு தொடர்பாக, இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், புதிய அரசு அமைவதில் சிக்கல் நிலவுகிறது. மேலும்,5 ஆண்டு கால ஆட்சியில் தலா 2.5 ஆண்டுகள் பங்கிட்டு கொள்ள வேண்டும் என்றும், ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி, சுழற்சி முறையில், முதல்வர் பதவியை எங்களுக்கு தர வேண்டும் என சிவசேனா தலைவர்கள் பிடிவாதமாக உள்ளனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் பாஜக சார்பில் குழுவும் அமைக்கப்பட்டது.

பாஜக - சிவசேனா இடையே கருத்து வேறுபாடு


இந்த சூழ்நிலையில், சிவசேனா கட்சி கூறுவது போன்று முதலமைச்சர் பதவியை அக்கட்சியுடன் 2.5 ஆண்டு காலம் பகிர்ந்து கொள்வதாக கடந்த மக்களவை தேர்தலுக்கு முன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று நேற்று தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் இதையே தன்னிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டார். எனவே, அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு தானே முதலைச்சர் பதவியில் இருக்கப்போவதாக பட்னாவிஸ் தெரிவித்திருந்தார். இதனால் மஹாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளுக்கிடையே நடக்கவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மஹாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் மீண்டும் முதல்வராக ஆட்சி அமைக்க போவதாக தகவல் வெளியாகியது. வருகிற வெள்ளிக்கிழமை அவர் பதவியேற்க கூடும் என பாஜக தரப்பில் கூறப்படுகிறது.

சட்டமன்றக் குழுத்தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு

இதனிடையே  மகாராஷ்டிராவின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் பாஜக தேசிய துணைத் தலைவர் அவினாஷ் ராய் கண்ணா ஆகியோரை அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா நியமித்திருக்கிறார்.இந்நிலையில், இதனிடையே மும்பையில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், மகாராஷ்டிர சட்டமன்ற பாஜக தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ்  தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் முதல்வர் பதவி கேட்டு பிடிவாதம் பிடிக்கும் சிவசேனா அதிர்ச்சி அடைந்துள்ளது. மும்பையில் பாஜகவின் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவரை ஒரு மனதாக தேர்வு செய்ய எம்எல்ஏக்கள் 105 பேரும் முழு ஆதரவு தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். சிவசேனா எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.

Tags : Devendra Fadnavis ,Maharashtra BJP ,legislator ,BJP ,Maharashtra , Devendra Fadnavis, Election, Legislative Council, Maharashtra, MLAs
× RELATED இலங்கைத் தமிழர்களுக்கு 72...