இன்று  (அக்.30) உலக சிக்கன தினம் இக்கணம், எக்கணம் தேவை சிக்கனம்

பரபரப்பான இந்த உலகில் பணத்தின் தேவை மிக முக்கியமானது. பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும் பணம் பிரதான பங்கு வகிக்கிறது. நமது வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வது மட்டுமல்ல...  எதிர்காலத்தேவைகளையும் கருத்தில் கொண்டு வாழ வேண்டும். ‘வரவு எட்டணா... செலவு பத்தணா’ என்று வாழ்ந்தால், திடீரென பெரும் பணத்தேவை ஏற்படும்போது தடுமாற்றம் ஏற்படும். இந்த தாக்கத்தால் மீள முடியாத பலர் கடன் தொல்லைக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர். இந்த நிலையை தடுக்க ஒரே வழி சேமிப்பு, சிக்கனம்.

1924ல் இத்தாலியில் உள்ள மிலன் நகரில்  சர்வதேச சேமிப்பு வங்கி பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாடு நடந்தது. இதில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் தேதி ‘உலக சிக்கன தினம்’ கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஒவ்வொருவரும் தனது வருமானத்தில் 10 சதவீதத்தை சேமிப்பாக வைத்திருக்க வேண்டும். இதற்கு சிக்கனமான வாழ்க்கை மிகவும் முக்கியமானது. நிறைய பேருக்கு சிக்கனம், கஞ்சத்தனம் இரண்டையும் ஒன்றாக பார்க்கின்றனர். அது தவறு. நம் வீட்டின் உணவுத்தேவைக்கு ஏற்ப சமைத்து, உணவை வீணாக்காமல் உண்ணுவதாக வைத்துக்கொள்வோம். இது சிக்கனம். சேமிக்க வேண்டும் என்பதற்காக அன்றாட நமது உணவின் அளவை குறைத்துக் கொள்வது கஞ்சத்தனம். இரண்டுமே வெவ்வேறு என்பது புரிகிறதா?

சேமிப்பும், சிக்கனமும் சரி சமமாக இருந்தால், பொருளாதார சமநிலையில் ஏற்றம் ஏற்படும் என்பது பொதுவான கருத்து. பெரிய அளவு பணத்தை சேமிப்பது மட்டுமே சேமிப்பு அல்ல... நம்மால் முடிந்தவரை ஒரு ரூபாய் கூட சேமித்து வைக்கலாம். எப்படி மலர்களில் இருந்து தேனை உறிஞ்சும் தேனீக்கள், அதை வைத்து ஒரு இனிய தேன்கூடை கட்டுகிறதோ அதைப்போலத்தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது கூட, சேமிப்பையும், சிக்கனத்தையும்தான் வலியுறுத்துகிறது.

எதிர்க்கால தேவையை கருத்தில் கொண்டு சிக்கனத்துடன் வாழ்க்கையை மேற்கொண்டு சிறுக  சிறுக சேமிப்பது மிகவும் முக்கியம். இந்த பழக்கத்தை நமது பிள்ளைகளுக்கும் கட்டாயம் கற்றுத்தர வேண்டும். பொருளாதாரரீதியாக ஒரு நாட்டின் முன்னேற்றம் தனி மனித சேமிப்பை மையமாக கொண்டதுதான். உங்கள் சேமிப்பு வீட்டுக்கும், நாட்டுக்கும் பயன்படுகிறது என்பதை புரிந்து கொண்டீர்களா?

ஆடம்பரமான வாழ்க்கையை தவிர்த்து, யதார்த்த வாழ்வையும் சிக்கனம் நமக்கு கற்றுத்தருகிறது. இதன்மூலம் எந்த சூழலிலும் நாம் வாழ்க்கையை நகர்த்திச் செல்லலாம். அடுத்தவரைப் போல தானும் வாழ வேண்டும் என்ற உணர்வு சிலநேரங்களில், நம்மை தவறான வழிகளுக்குத்தான் இட்டுச்செல்லும். பிரபல போர்டு கார் நிறுவன அதிபர் ஹென்றிபோர்டு, ஒரு மாநாடுக்காக சென்ற இடத்தில், ஹோட்டலில் இரண்டாம் தரமான அறையை எடுத்தார். ஹோட்டல் பணிப்பெண் அவரிடம், “சற்று நேரத்துக்கு முன்னால் வந்த தங்கள் மகன், முதல் தர அறையை எடுத்திருக்கிறார். நீங்கள் 2ம் தர அறையை கேட்குறீர்களே’’ என கேட்டார். அதற்கு ஹென்றிபோர்டு, “அவனது அப்பா கோடீஸ்வரர். எனது அப்பா அப்படி இல்லை’’ என்றாராம். இப்போது புரிகிறதா? எது சிக்கனம் என்று?

இந்த நவீன காலகட்டத்தில் பணத்திற்கு பதிலாக கிரடிட் கார்டை பலர் பயன்படுத்துகின்றனர். இது அவசியம்தான். ஆனால், வரைமுறையின்றி அதில் செலவழித்து விட்டு கட்ட முடியாமல், வட்டி கட்டி பலர் பரிதவிக்கின்றனர். கிரடிட் கார்டு இருந்தாலும் சிக்கனமான பயன்பாட்டு முறை மிகவும் முக்கியம். பணம் மட்டுமல்ல... தண்ணீர், மின்சாரம் இப்படி நம் அன்றாட வாழ்விற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். அது நமக்காக மட்டுமல்ல.. நமது வருங்கால சந்ததிக்கும்தான் என்பதை உணர வேண்டும். ஆகையால்... இக்கணமும், எக்கணமும் சிக்கனம் அவசியம் உணர வேண்டும்.

Related Stories:

>