×

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரணை நடத்த அவசியம் இல்லை: தமிழக அரசு பதில் மனு

சென்னை: ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை என காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா  வழக்கை  ரத்து செய்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டியதில்லை என அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விவரம்:

ஆர்.கே நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்ததையடுத்து, அந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது இந்த தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக அபிராமபுரம் காவல்நிலையத்தில்  வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதில் யார் பேரையும் குறிப்பிடவில்லை. இதையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வக்கீல் வைரக்கண்ணன் என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதேபோல, தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் கடந்த செப்டெம்பர் 25ம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் என்.சேஷசாயி ஆகியோர் முன்பு விசாணைக்கு வந்தது. அப்போது, அபிராமபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கை ஐகோர்ட்டு ரத்து செய்த பின்னர், இத்தனை மாதங்களாக தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பியிருந்தனர். அதேசமயம், பணப்பட்டுவாடா வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர். மேலும், மருதுகணேஷ் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

தேர்தல் ஆணையம் ரகசிய அறிக்கை தாக்கல்:

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அக்டோபர் மாதம் 22ம் தேதி ரகசிய அறிக்கையாக உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்தது. ஆணைய நடவடிக்கைகளை வாய்மொழியாக தெரிவிக்க விரும்பாததால் சீலிட்ட கவரில் அறிக்கையை தாக்கல் செய்தது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை 30ம் தேதி (இன்றைக்கு) ஒத்திவைத்தனர்.

தமிழக அரசு பதில் மனு:

அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்போது, பணப்பட்டுவாடா தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அவசியம் இல்லை என தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தேர்தல் நடத்தும் அதிகாரி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. தற்போது எந்த வழக்கும் நிலுவையில் இல்லாததால் பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரணைக்கு அவசியம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் இறுதி விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Tags : CBI ,RK Nagar ,government ,Tamil Nadu , RK Nagar by-election, money laundering, CBI probe, not necessary, Tamil Nadu government, petition
× RELATED ஆர்.கே.நகர் அரசினர் தொழிற்பயிற்சி...