×

மாதம் ரூ.1.5 கோடி வட்டியில் கரைகிறது கடனில் மூழ்குகிறது தேனி நகராட்சி

தேனி :தேனி  நகராட்சி நிர்வாகம் பலநுாறு கோடி ரூபாய் கடனில் மூழ்கி உள்ளது. இதனால்  மாதந்தோறும் 1.5 கோடி வட்டி கட்டும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக நகராட்சி  அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: தேனி  நகராட்சியில் புதிய பேருந்து நிலையம், வைகை கூட்டுக் குடிநீர் திட்டம்,  பாதாள சாக்கடை திட்டம், நகராட்சி ரோடுகளை சீரமைத்தல் உட்பட பல்வேறு பணிகள்  செய்யப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளாகவே அரசிடம் இருந்து நகராட்சி  பணிகளுக்கு எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை.

நகராட்சி வருவாய் மற்றும்  கடன் மூலம் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் நகராட்சி நிர்வாகம்  பல நுாறுகோடி ரூபாய் கடனில் மூழ்கி உள்ளது. மாதந்தோறும் வட்டி மட்டும் 1.5  கோடி செலுத்தும் அளவிற்கு நிலைமை சிக்கலாகி உள்ளது. குடிநீர் கட்டணம்  உயர்த்தவும், நகராட்சி புதிய பஸ்ஸ்டாண்ட் கடைகளின் வாடகை உயர்த்தவும்,  புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கி மக்கள் பங்களிப்பை பெறவும், பாதாள  சாக்கடைக்கு முறையாக கட்டணம் நிர்ணயித்து வரி வசூலித்தும் இந்த கடன்  மற்றும் வட்டியை திரும்ப செலுத்தும் திட்டம் நகராட்சியிடம் உள்ளது.

ஆனால்  இந்த திட்டத்தை செயல்படுத்த தேவையான அதிகாரிகள் இல்லை. தற்போதைய நிலையில்  நகராட்சிக்கு கமிஷனரும் இல்லை. பொறியாளரும் இல்லை. குறிப்பாக செக் பவர்  கொண்ட அதிகாரிகள் கூட இல்லை. இதனால் நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் போடும்  பணி கூட கிடப்பில் கிடக்கிறது. மாதந்தோறும் 10ம் தேதிக்கு மேல் தான்  சம்பளமே கிடைக்கிறது. இந்த சூழ்நிலை மாற நகராட்சி பொறியாளரும், கமிஷனரும்  உடனடியாக நியமிக்கப்பட வேண்டும். தேர்தல் நடைமுறைகளை காரணம் காட்டி  சிறப்பாக பணிபுரியும் அதிகாரிகளை கூட வேறு பகுதிகளுக்கு மாற்றி விடுவதால்  இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண்பதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது.  நகரில் வசிக்கும் மக்கள் மனநிலை அறிந்து செயல்படும் அதிகாரிகளை நியமித்தால்  மட்டுமே நகராட்சி வருவாயினை முறைப்படி உயர்த்தி இப்பிரச்னைகளுக்கு தீர்வு  காண முடியும். இவ்வாறு கூறினர்.

Tags : municipality ,Theni ,Theni Municipality , Theni , theni allinagaram,Theni Municipality ,debits,intrest
× RELATED சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை