×

வரத்து அதிகரிப்பு வெண்டை விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை

திருப்பூர் :  திருப்பூர்-பல்லடம் ரோடு தென்னம்பாளையம் மொத்த காய்கறி மார்க்கெட்டில் வெண்டை வரத்து அதிகரித்துள்ளதால் 17 கிலோ ஒரு மூட்டை ரூ.200 விற்பனையானது. விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருப்பூர்-பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் தெற்கு உழவர் சந்தை, தினசரி மொத்த காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. திருப்பூர், கோவில் வழி, அருள்புரம், நல்லூர், செவந்தபாளையம், அல்லாலபுரம், நொச்சிபாளையம், மங்கலம், அணைப்பாளையம், முதலிபாளையம் உட்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் தங்களுடைய விளை நிலங்களிலுள்ள காய்கறிகளை அறுவடை செய்து திருப்பூர் உழவர் சந்தை, மொத்த காய்கறி சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

 திருப்பூர் மாநகர், மங்கலம், அவிநாசி, பல்லடம், நல்லூர் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர், காய்கறி கடைகள், மளிகை கடை உள்ளிட்ட சிறு வியாபாரிகள் தென்னம்பாளையம் மொத்த காய்கறி சந்தையில் காய்கறிகளை மொத்த விலையில் வாங்கி, கிராமங்களில் சில்லரை விலையில் விற்பனை செய்கின்றனர். மொத்த காய்கறி சந்தைக்கு தினமும் 40 ஆயிரம் டன் முதல் 50 ஆயிரம் டன் காய்கறிகள் வரத்து உள்ளது. தென்னம்பாளையம் மொத்த காய்கறி சந்தையில் உள்ளூர் விற்பனை போக ஒட்டன்சத்திரம் மொத்த காய்கறி சந்தைக்கும், கேரளாவிற்கும் 20க்கும் மேற்பட்ட  லாரிகளில் காய்கறிகள் தினமும் அனுப்பப்படுகிறது.

திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெண்டை விளைச்சல் அதிகரித்துள்ளதால் 17 கிலோ எடையுள்ள ஒரு சாக்கு மூட்டை ரூ.200க்கு விற்பனையானது.  திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வேலைபார்த்த வெளிமாவட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றதால் காய்கறி சந்தைக்கு நுகர்வோரின் வருகை குறைந்துள்ளது. இதனால், கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை விலைபோனதால் விவசாயிகள் எதிர்பார்த்த விலை கிடைக்காமல் கவலையடைந்துள்ளனர்.

Tags : area ,Tirupur ,Ladies Finger , Tirupur ,Ladies Finger,rate decrease,Tirupur
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்