×

புதுச்சேரி ஏனாமில் 2012ம் ஆண்டு நடைபெற்ற கலவரம்: ரிஜென்சி நிறுவன தொழிலாளர்கள் 46 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட ஏனாமில் 2012ம் ஆண்டு நடைபெற்ற கலவர வழக்கில் ரிஜென்சி தனியார் நிறுவன தொழிலாளர்கள் 46 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. புதுச்சேரி பிராந்தியத்திற்கு உட்பட்ட ஆந்திராவில் உள்ள ஏனாம் பகுதியில் ரிஜென்சி செராமிக் என்ற பீங்கான் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த 2012ம் ஆண்டு மூத்த தொழிலாளர்களுக்கு சேவையை முறைப்படுத்த வேண்டும், ஊதியங்கள் திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். அப்போது, பீங்கான் தொழிற்சாலையின் அதிகாரி ஒருவர் அவரது இல்லத்தில் கொலை செய்யப்பட்டார்.

இதனால் அங்கு கலவரம் உருவானது. அந்த கலவரம் வன்முறையாக வெடித்தது. அந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை மற்றும் காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்தினர். அங்குள்ள வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். அப்போது , 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு இன்று புதுச்சேரி பகுதியில் உள்ள முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் ஏனாம் பகுதியில் உள்ள ரிஜென்ஸ் தொழிற்சாலை கலவர வழக்கில் காவல்நிலையம் மற்றும் தொழிற்சாலையை சேதப்படுத்திய வழக்கில் 46 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, அந்த வழக்கில் மேலும் குற்றம் சாட்டப்பட்ட 38 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்பு புதுச்சேரி வட்டாரத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : regency workers , Puducherry, Yanam, riot, Regency factory, workers, criminals, judgment
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...