×

தேர்தல் புறக்கணிப்பு எதிரொலி 5 ஆண்டுகளுக்கு பின்னர் கோதையாறுக்கு பஸ்கள் இயக்கம்

நெல்லை :  மலைவாழ் மக்களின் தொடர் கோரிக்கை எதிரொலியாக 5 ஆண்டுகளுக்கு பின்னர் கோதையாறுக்கு தற்போது பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நெல்லை மாவட்டத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதியாக காணப்படும் சுமார் 150 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு மட்டுமே சுற்றுலாவுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. பிற இடங்களில் குடியிருக்கும் மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள் அடிப்படையில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட  மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசும், வனத்துறையும் இணைந்து பஸ்களை இயக்கி வருகின்றன. நாலுமுக்கு பகுதியில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள கோதையாறுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு பஸ்கள் நெல்லையில் இருந்தும், பாபநாசத்தில் இருந்தும் இயக்கப்பட்டு வந்தன. பின்னர் சாலை பழுதை காரணம் காட்டி நாலுமுக்கு வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன. கோதையாறுக்கு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. சாலை சீரமைப்பு பணிகள் நடந்த பின்னரும், கோதையாறு குமரி மாவட்டத்தில் இருப்பதை காரணம் காட்டி நெல்லை அரசு போக்குவரத்து கழகம் அங்கு பஸ்கள் இயக்குவதை தாமதப்படுத்தியது.

இதையடுத்து ேகாதையாறில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதிக்கு முன்பு போல பஸ்கள் இயக்க வேண்டும் என நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளிடமும், கலெக்டரிடமும் மனு அளித்து வந்தனர். இருப்பினும் அவர்களது கோரிக்கைகள் கண்டு கொள்ளப்படவில்லை. கோதையாறு பகுதியை பொறுத்தவரையில் மின்வாரிய ஊழியர்கள், வனத்துறை ஊழியர்கள், அணை பாதுகாப்பு அதிகாரிகள் என 60க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் 6 பேருக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓட்டுரிமை உள்ளது. கடந்த தேர்தலை பஸ்கள் இயக்காததை காரணம் காட்டி இவர்கள் மொத்தமாக புறக்கணித்தனர்.

இந்நிலையில் கடந்த 25ம் தேதி முதல் கோதையாறுக்கு மீண்டும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பஸ்கள் இயக்கத்தால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘‘நெல்லையில் இருந்தும், பாபநாசம் டிப்போவில் இருந்தும் இயக்கப்படும் பஸ்கள் நாலுமுக்கு பகுதியோடு திரும்புவது வழக்கமாக இருந்தது. அதில் இருந்து கோதையாறுக்கு 5 கிமீ தூரம் நாங்கள் நடந்தே செல்ல வேண்டும்.

இரவு நேரத்தில் நாங்கள் வனப்பகுதியில் நடந்து செல்வது கடினமாக உள்ளது. சிலர் டூவீலர்களை நாலுமுக்கில் போட்டுவிட்டு, திரும்பும்போது எடுத்துச் செல்வர். இரு மாவட்ட அதிகாரிகளின் முயற்சியாலும், அம்பை தொகுதி எம்எல்ஏ முருகையா பாண்டியன் நடவடிக்கையாலும் இப்போது கோதையாறுக்கு மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முன்பு போல எங்கள் பகுதிக்கு பஸ்களை முறையாக இயக்கிட வேண்டும்’’ என்றனர். பாபநாசம் டிப்போவில் இருந்து கோதையாறுக்கு காலை, மாலை என இரு வேளைகளில் பஸ்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags : election ,Kothaiyaru ,Gotham , election boycott,Kothaiyaru ,Bus service, nellai
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...