×

ஏர்வாடியில் செயல்படாத ஆழ்துளை கிணறுகள் மழைநீர் சேகரிப்பு தொட்டியானது

ஏர்வாடி :   ஏர்வாடியில் தெருக்களில் செயல்படாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் மீள் நிரப்பி சேகரிப்பு தொட்டியாக ஈமான் அறக்கட்டளையினர் மாற்றி அமைத்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி சார்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து தெருக்களிலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. இதில் அடிபம்பு மூலம் தண்ணீர் எடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.  தற்போது ஏர்வாடி பகுதி முழுவதும் நிலத்தடிநீர் 500 அடி
ஆழத்திற்கு சென்றுவிட்டதால் தெருக்களில் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் தூர்ந்து விட்டன.

இந்நிலையில் திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் பலியான சம்பவத்தையடுத்து திறந்த நிலையில் கிடக்கும் அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் மூடவோ, மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றவோ அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஏர்வாடியில் பயன்பாடின்றி கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை ஈமான் சங்க நீர்மேலாண்மை குழுவினர் மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் முதற்கட்டமாக 1ம் தெரு முதல் 5ம் தெரு வரையுள்ள ஆழ்துளை கிணறுகளை நெல்லை மாவட்ட பேரூராட்சி பொறியாளர் மாஹின் மற்றும் உதவி பொறியாளர் வாசுதேவன் ஆலோசனைப்படி மழைநீர் மீள்நிரப்பி சேகரிப்பு தொட்டியாக மாற்றி வருகின்றனர்.

இதுகுறித்து ஈமான் சுற்றுச்சூழல் மற்றும் நீர்மேலாண்மை குழு முகைதீன் கூறியதாவது: ஏர்வாடியில் 35 அடியில் இருந்த நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு 500 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. வருங்கால சந்ததியினருக்கு பயன்படும் வகையில் தூர்ந்து போன ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு ெதாட்டியாக மாற்ற கடந்த கோடையிலேயே முடிவெடுத்தோம். அதன் தொடக்கமாக ஈமான் அறக்கட்டளையும், ஏர்வாடி பகுதி தன்னார்வலர்களும் இணைந்து 1வது முதல் 5வது தெரு வரையுள்ள செயல்படாத ஆழ்துளை கிணறுகளை ரூ.2 லட்சம் செலவில் மழைநீர் மீள்நிரப்பி சேகரிப்பு தொட்டியாக மாற்றிவருகிறோம். இதன் மூலம் ஏர்வாடி பகுதி முழுவதும் நிலத்தடி நீர்மட்டமும் உயர வாய்ப்பு ஏற்படும், என்றனர்.

Tags : wells ,Deepwater ,Ervadi ,Borewells ,Rainwater Harvesting Scheme , Ervadi,Rainwater Harvesting,Unused Borewells,Borewells
× RELATED பல்லடம் அருகே பொங்கலூரில்...