×

காஷ்மீருக்குச் செல்ல உள்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தடை; ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களுக்கு அனுமதியா?: சிவசேனா கேள்வி

மும்பை: காஷ்மீருக்குச் செல்ல உள்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அனுமதியளிக்காத மத்திய அரசு, ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களுக்கு மட்டும் எப்படி அனுமதி அளிக்கிறது என்று சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அதேசமயம் காஷ்மீர் என்பது உள்நாட்டு விவகாரம், இதில் வெளிநாட்டு எம்.பி.க்களை பார்வையிட அனுமதித்தது தவறானது என்று மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டி சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், 370-வது பிரிவு நீக்கம் ஆகியவற்றில் பிரதமர் மோடியையும், அவர் தலைமையிலான அரசையும் சிவசேனா கட்சி பெருமையாகப் பேசி, புகழாரம் சூட்டியது. ஆனால் மகாராஷ்டிர தேர்தலில் பாஜகவுக்கும் சிவேசேனாவுக்கும் இடையே ஆட்சி அதிகாரத்தை பகிர்வதில் ஏற்பட்டுள்ள குழப்பம், இழுபறி போன்றவற்றால் சிவசேனா, மீண்டும் மத்திய அரசை விமர்சிக்கத் தொடங்கியுள்ளது. சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் இன்று எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்பது முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என்று இந்திய அரசு உலக அளவில் கூறி வருகிறது. இது சர்வதேச விவகாரம் அல்ல என்றும் வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 23 எம்.பி.க்களுக்கு எவ்வாறு காஷ்மீர் சென்று கள நிலவரத்தை அறிய மத்திய அரசு அனுமதி அளித்தது.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.வரை கொண்டு சென்றதற்காக இன்றுவரை பண்டிட் ஜவஹர்லால் நேருவை நாம் விமர்சித்து வருகிறோம். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா.வின் தலையீட்டை நாம் விரும்பாதபட்சத்தில் எவ்வாறு ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களை காஷ்மீரின் கள நிலவரத்தை அறிய அனுமதிக்க முடியும். இந்தியாவின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கு எதிராக ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த எம்.பி.க்கள் அத்துமீறி நுழைவதாகக் கருதப்படாதா?

காஷ்மீருக்குள் செல்வதற்கு ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களுக்கு அனுமதி அளிக்கும்போது, உள்நாட்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்த காஷ்மீர் பயணத்தில் ஐரோப்பிய எம்.பி.க்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என கேள்விகளை சிவசேனா கேட்டுள்ளார். இந்தக் கேள்விக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்க வேண்டும். ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் காஷ்மீரைப் பார்த்துவிட்டு அமைதியாக நாட்டைவிட்டுச் செல்ல வேண்டும். இங்கிருக்கும் சூழலைச் சீர்குலைத்துவிடக்கூடாது என்று சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : MPs ,party leaders ,Shiv Sena ,Kashmir ,EU , Kashmir, go, domestic, political, party leader, ban, European Union MP, sanction ?, Shiv Sena, Question
× RELATED சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானது கட்சி தலைவர்கள் கண்டனம்