குடிமராமத்து பணியால் குடியிருப்புக்கு பாதிப்பு எனக்கூறி குழியில் படுத்து மக்கள் போராட்டம்

*காரைக்குடி அருகே பரபரப்பு

காரைக்குடி : காரைக்குடி அருகே சங்கராபுரம் வேடன் நகர் பகுதியில் நடக்கும் குடிமராமத்து பணியால், குடியிருப்புக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி குழியில் படுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சியில் சங்கு சமுத்திர கண்மாய் கடந்த சில நாட்களாக குடிமராமத்து பணியின் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது. நேற்று ஆவின் அருகே உள்ள கண்மாய் பகுதியை தூர்வாரும் பணி நடந்தது. இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் வேடன் நகர் என அமைத்து 100க்கும் மேற்பட்ட குடும்பங்களாக குடியிருந்து வருகின்றனர்.

குடியிருப்பு அருகே குடிமராமத்து பணிக்கு என தூர்வாரப்படும்போது, பள்ளத்தில் குழந்தைகள் தவறி விழும் நிலை ஏற்படும். குடியிருப்புகளுக்கும் ஆபத்து ஏற்படும் என தெரிவித்து பணிக்கு வெட்டப்பட்ட குழியில் படுத்தும், மண் அள்ளும் ஜேசிபி இயந்திரத்தின் முன்பு அமர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்குடி தாசில்தார் பாலாஜி, பேச்சு வார்த்தை நடத்தி சமாதான கூட்டத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து முன்னாள் ஊராட்சி தலைவர் மாங்குடி கூறுகையில், ‘‘குடிமராமத்து பணியால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள். 30 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் நிலையில் இவர்களுக்கு ஊராட்சி சார்பில் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளோம். கண்மாய் புறம்போக்கு என தெரிந்துதான் இங்கு குடியிருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது திடீரென குடிமராமத்து என்ற பெயரில் அகற்றக்கூடாது. இவர்களுக்கு என உரிய இடம் கொடுத்து அதன் பின்னர் பணியை துவங்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து இப்பகுதியில் வசிக்கும் குமார், சோலை கூறுகையில், ‘‘30 வருடங்களுக்கும் மேலாக குடியிருக்கிறோம். எங்களுக்கு மாற்று இடம் கொடுத்து அதற்கு உரிய பட்டா மற்றும் குடியிருப்புகள் அமைத்து கொடுத்து விட்டு இருக்கும் இடத்தை தூர்வார வேண்டும். அதுவரை பணியை தொடர அனுமதிக்க மாட்டோம். காலையில் நாங்கள் ஊசி, மணி, பாசி விற்பனை செய்ய சென்று விடுவோம். வீடுகளில் சிறுவர்கள் மட்டுமே இருப்பார்கள். குடியிருப்பு அருகே தூர்வாருவதால் ஏற்படும் பள்ளத்தில் சிறுவர்கள் தவறி விழுந்து உயிர் பலி ஏற்பட வாய்ப்புள்ளது. தவிர வீடுகளும் இடிந்து விழும் அபாயம் உள்ளது’’ என்றனர்.

Related Stories:

>