×

கோவில்பட்டியில் பிரபல ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் 2 கோடி மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிரபல ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான துணி வகைகள் எரிந்து சேதம் அடைந்தன. கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையம் அருகே கண்ணப்பன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பிரபல ஜவுளிக்கடை கடந்த ஒரு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இன்று அதிகாலையில் திடீரென தீப்பிடித்து பற்றி எரிவதை கண்ட இரவு நேர காவலர்கள் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீ விபத்தில் கடையில் 3 மாடிகளுக்கும் தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியே கரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர் மின்சார துறையினர் வந்து அப்பகுதியில் உள்ள மின் இணைப்பை துண்டித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி, விளாத்திக்குளம், கழுகுமலை ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பலமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிகாலையில் கடை பூட்டியிருந்த போது தீ விபத்து ஏற்பட்டதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 3 மாடி கட்டிடம் எரிந்து சேதமடைந்ததோடு சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள துணி வகைகளும் எரிந்து நாசமாகின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kovilpatti , Kovilpatti, cloth, fire, Chennai silks, fabrics, ruins
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா