மஹாராஷ்டிராவில் மீண்டும் முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்?: நவம்பர் 1ல் பதவியேற்பார் என தகவல்!

மும்பை: மஹாராஷ்டிர முதலமைச்சராக பாஜக-வின் தேவேந்திர பட்னாவிஸ் வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் பதிவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பா.ஜ., - சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ., 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அடுத்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு, அந்த கூட்டணிக்கு எளிதாக கிடைத்தது. இந்த நிலையில், முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவை பங்கீடு தொடர்பாக, இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், புதிய அரசு அமைவதில் சிக்கல் நிலவுகிறது. மேலும்,5 ஆண்டு கால ஆட்சியில் தலா 2.5 ஆண்டுகள் பங்கிட்டு கொள்ள வேண்டும் என்றும், ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி, சுழற்சி முறையில், முதல்வர் பதவியை எங்களுக்கு தர வேண்டும் என சிவசேனா தலைவர்கள் பிடிவாதமாக உள்ளனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் பாஜக சார்பில் குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், சிவசேனா கட்சி கூறுவது போன்று முதலமைச்சர் பதவியை அக்கட்சியுடன் 2.5 ஆண்டு காலம் பகிர்ந்து கொள்வதாக கடந்த மக்களவை தேர்தலுக்கு முன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று நேற்று தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் இதையே தன்னிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டார். எனவே, அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு தானே முதலைச்சர் பதவியில் இருக்கப்போவதாக பட்னாவிஸ் தெரிவித்திருந்தார். இதனால் மஹாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளுக்கிடையே நடக்கவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மஹாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் மீண்டும் முதல்வராக ஆட்சி அமைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற வெள்ளிக்கிழமை அவர் பதவியேற்க கூடும் என பாஜக தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஒருவேளை அன்றைய நாளில் விழா நடைபெறவில்லை என்றால் சனிக்கிழமையன்று பதவியேற்பு விழா நடைபெறும் என பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>