×

பீன்யா தொழிற்பேட்டையில் ஆட்டோமொபைல் தொழிற்துறையின் பெரிய சரிவினால் பெரிய அளவில் வருவாய் இழப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள பீன்யா தொழிற்பேட்டையில் ஆட்டோமொபைல் தொழிற்துறையின் பெரிய சரிவினால் பெரிய அளவில் வருவாய் இழப்பும், வேலையின்மையும் ஏற்பட்டுள்ளது. மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்த இந்த தொழிற்பேட்டை சமீபத்திய பொருளாதார மந்தநிலை, ஆட்டோமொபைல் துறையின் பெரிய சரிவினால் சுறுசுறுப்பிழந்து மந்தமாகக் காணப்படுகிறது. வாடிக்கையாளர்களின் தேவைகளை உடனடியாகக் கவனிக்க சுறுசுறுப்பாக இயங்கி வந்த பீன்யா தொழிற்பேட்டை தற்போது தொழிலாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து வருகிறது. ஓவர் டைம் கிடையாது, இதனால் தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்யும் புனீத் கூறும்போது, ஒவர்டைம் சேர்த்து எனக்கு மாதம் ரூ.22,000 வருவாய் வரும் ஆனால் இப்போதெல்லாம் ரூ.14000 வருவதே பெரும்பாடாக உள்ளது என்றார். ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டையாகக் கருதப்படும் பீன்யாவில் சுமார் 8,000 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களாக இங்கு சில நிறுவனங்கள் தொழிலாளர்களை பணியிலிருந்து விடுவித்து வருகின்றன. ஷிப்ட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு சில வேளைகளில் தொழிலாளர்களுக்கு வாரம் இரண்டு நாட்கள் விடுப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள சரிவினால் இந்தத் தொழிற்பேட்டையில் உற்பத்தி 50% குறைந்துள்ளது.

கர்நாடகாவில் மட்டும் 6 லட்சத்துக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. 70 லட்சத்துக்கும் அதிகமானோர் இதில் பணியாற்றி வருகின்றனர். இதில் பாதிக்கும் மேலான தொழில் நிறுவனங்கள் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன என்று கர்நாடகா சிறு தொழில் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பாக கர்நாகடா சிறுதொழில் கூட்டமைப்பு மத்திய அரசு மந்த நிலையை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தத் துறையிலிருந்து சுமார் 30 லட்சம் பேர் வேலையிலிருந்து அனுப்பப்படும் சூழல் ஏற்படும் என்று எச்சரித்திருந்தது.

புர்ஜி என்ற தொழில் நிறுவனத்தின் நிர்மய் புர்ஜி கூறும்போது, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தி கடந்த 4 மாதங்களில் இருந்ததை விட தற்போது 40% குறைந்துள்ளது. வராக்கடன்களினால் வங்கிகள் கடன் விஷயத்தில் பிடியை இறுக்கியுள்ளன. கடன்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை எனில் நிச்சயம் தொழில் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றார். ஆட்டோமொபைல் தொழிற்துறையின் சரிவினால் சம்பளம் உள்ளிட்ட வருவாய் நிலைகள் திருப்தியளிக்காமல் நிறைய தொழிலாளர்கள் கிராமத்துக்கே சென்று விட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பீன்யா தொழிற்கூட கூட்டமைப்பின் நிர்வாகிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து மத்திய அரசு தலையீடு தேவை என்று கோரியிருந்தனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கையும் ஜிஎஸ்டி வரிவிதிப்பின் தன்மைகளும் சரிவுக்குக் காரணம் என்று இந்தத் தொழிற்கூட்டமைப்பு தெரிவிக்கிறது. பீன்யா தொழிற்கூடங்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.எம். கிரி கூறும்போது, கூலிக்கட்டனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைக்கக் கோரியுள்ளதாக உற்பத்தி 25% சரிவு கண்டுள்ளது எனவும் தெரிவித்தார். ஒவ்வொரு துறையிலும் உற்பத்தி மந்தம் பல்வேறு தளத்தில் இருப்பதாகக் கூறும் அவர் ஆட்டோமொபைல் துறை சார்ந்த துணை உற்பத்திகள் பெரிய அளவில் அடி வாங்கி 50% சரிவு கண்டது என்றார். இன்ஜினியரிங் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் தொழிற்கூடங்களில் 25-30% உற்பத்தி குறைந்துள்ளது என்கிறார்.

இதே தொழிற்பேட்டையில் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு நிலையம் பொதுவாக சுறுசுறுப்பாக இயங்குவது தற்போது மந்தமாகியுள்ளது. மெரேனா கிரியேட்டிவ்ஸ் என்ற நிறுவனத்தின் வர்த்தக மேலாளர் ரோகிணி ராஜ் கூறும்போது, இது 25 ஆண்டுகால நிறுவனமாகும் கடந்த ஓராண்டில் 5 யூனிட்களை இழுத்து மூடியுள்ளோம். எங்கள் தலைமை அலுவலகம் மட்டுமே திறந்துள்ளது. அதுவும் ஒரேயொரு சிக் யூனிட்டை நடத்தி வருகிறது. பேக்கேஜிங் உள்ளிட்ட சிறு தொழில் கூடங்களும் பொருளாதார மந்தநிலையினால் பீன்யா தொழிற்பேட்டையில் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.

Tags : Beanya industry, automobile, industry, major downturn, loss of revenue
× RELATED ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி,...