×

வடகிழக்கை நோக்கி தாழ்வு மண்டலம் நகரும் என்பதால் தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: 50-60 கி.மீ. வேகத்தில் காற்றுவீசக் கூடும்

சென்னை: வடகிழக்கை நோக்கி தாழ்வு மண்டலம் நகரும் என்பதால் தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் காற்றுவீசும் என்பதால் குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குமரி கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி ஒரு வாரம் ஆகும் நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதன்பின் மழையளவு பெருமளவு குறைந்துள்ளது. இந்நிலையில் இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மையம் கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின் ஆழ்ந்த மண்டலமாகவும் அதாவது புயல் சின்னமாகவும் மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், வேலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் பாதுகாப்பு வளைவுகளை தாண்டி வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் சங்கரன் கோயிலில் 14 செ.மீ., மழை பெய்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. தொடர் மழை காரணமாக பாதுகாப்பு கருதி கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.

மழை பெய்ய வாய்ப்பு உள்ள இடங்கள்

தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினத்திலும், வட மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் 7 செ.மீ., மாமல்லபுரம், வலங்கைமான் தலா 6 செ.மீ., நெய்வேலி, வானூர், மதுராந்தகம், குடவாசல் தலா 5 செ.மீ., நன்னிலம், கடலூர், மாதவரம், திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம், சோழவரம், மன்னார்குடி, ஸ்ரீபெரும்புதூர், மயிலாடுதுறை, திருவையாறு, செங்குன்றம், சீர்காழி தலா 4 செ.மீ., காட்டுமன்னார் கோவில், திண்டிவனம், திருவிடைமருதூர், ஆடுதுறை, பாபநாசம், திருமானூர், திருத்தணி, காஞ்சீபுரம், சத்யபாமா பல்கலைக்கழகம், மதுக்கூர், பாடலூர், வல்லம், சமயபுரம், நீடாமங்கலம், தொழுதூர், செஞ்சி, திருக்கோவிலூர், ஒரத்தநாடு, வெண்பாவூர், கந்தர்வக்கோட்டை தலா 3 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை பெய்துள்ளது.

Tags : rainfall ,Tamil Nadu ,Puducherry ,zone ,Northeast , Heavy rainfall in Tamil Nadu, Puducherry for 2 days as low-lying zone moves towards Northeast: 50-60 km Winds may accelerate
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...