×

ஆவடி அருகே சோகம் கார் விபத்தில் நடிகர் பலி: மனைவி படுகாயம்

சென்னை: சாலை தடுப்பில் மோதி கார் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த நடிகர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை ராஜமங்கலம் பாபா நகர் 10வது தெருவை சேர்ந்தவர் மனோ மோன்வேல் (37). சினிமா மற்றும் டிவி சீரியல் நடிகர். இவரது மனைவி லிவியா (26). நேற்று முன்தினம் மனோ, தனது மனைவி லிவியாவுடன் கூடுவாஞ்சேரியில் உள்ள நண்பர் வீட்டுக்கு காரில் சென்றுவிட்டு இரவு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

ஆவடி அருகே மோரை 400 அடி வெளிவட்ட சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவர் மீது மோதியதில் அப்பளம் போல நொறுங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே மனோ இறந்தார். அவரது மனைவி லிவியா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் சிக்கிக் கொண்டிருந்த லிவியாவை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மனோவின் சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : car accident ,Avadi ,Actor , Avadi, car accident, actor, kills
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!