×

லாரி மீது கார் மோதி விபத்து ஏர் இந்தியா நிறுவன ஊழியர் உடல் நசுங்கி பலி: லாரி டிரைவர் கைது

சென்னை: போக்குவரத்து விதிகளை மீறி சாலையை அடைத்தபடி நிறுத்தப்பட்டிருந்த தண்ணீர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சீனியர் மேலாளர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். சென்னை மயிலாப்பூர் நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், இவரது மகன் ரவிச்சந்திரன் (55). மும்பையில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சீனியர் மேலாளராக வேலை செய்து வந்தார். தீபாவளி பண்டிகைக்கு சென்னைக்கு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பர் ஒருவரை பார்த்து விட்டு கால்டாக்சி மூலம் தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

கால் டாக்சியை திருவள்ளூர் பழவேற்காடு பகுதியை சேர்ந்த முகமது அசேன் (27) ஓட்டினார். அப்போது நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் முன்பு போக்குவரத்து விதிகளை மீறி தண்ணீர் லாரி  ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. நள்ளிரவு என்பதால் சாலை வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் கால் டாக்சி டிரைவர் முகமது அசேன் காரை வேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த தண்ணீர் லாரி மீது எதிர்பாராதவிதமாக கால் டாக்சி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளனது. இதில் கால் டாக்சி முன் இருக்கையில் அமர்ந்து இருந்த ஏர் இந்தியா சீனியர் மேலாளர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். கார் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்தை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பாண்டிபஜார் போக்குவரத்து புலானாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிய கால் டாக்சி ஓட்டுநரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த ரவிச்சந்திரனின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கு காரணமான தண்ணீர் லாரி டிரைவர் விருதுநகர் மாவட்டம் காட்டான்படி சாமியார் காலனியை சேர்ந்த வேல்முருகன் (35) என்பவர் மீது 279, 337, 304 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். போக்குவரத்து வீதிகளை மீறி நிறுத்தப்பட்டிருந்த தண்ணீர் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கோர விபத்தால் சிறிது நேரம் நுங்கம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Air India ,accident ,arrest ,lorry driver , Car collision, accident, lorry driver, arrested on lorry
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...