×

டெல்லி முதன்மை அமர்வுக்கு இணையாக சென்னையில் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீடு தீர்ப்பாய அமர்வு: டிசம்பர் முதல் செயல்படும்

சென்னை: டெல்லியில் உள்ள தேசிய கம்பெனி சட்ட மேல் முறையீடு தீர்ப்பாயத்துக்கு இணையாக சென்னையில் வரும் டிசம்பர் முதல் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீடு தீர்ப்பாய அமர்வு செயல்பட உள்ளது. நிறுவனங்கள் வாங்கும் கடன்கள், திவால் அறிவிப்பு போன்ற விஷயங்கள் தொடர்பான வழக்குகளை கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயங்கள் விசாரித்து வருகின்றன. கடன் வசூல், திவால் போன்ற வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் கம்பெனிகள் சட்ட வாரியம் உள்ளன. இந்த வாரியங்களின் தீர்ப்பை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் தான் மேல்முறையீடு செய்ய வேண்டும். இதனால், பெரும் பணச்செலவும், கால விரயமும் ஏற்படுகிறது. இதையடுத்து, சென்னையில் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீடு தீர்ப்பாயத்தின் அமர்வை  அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி ஆடிட்டர் வி.வெங்கட சிவகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதே நேரத்தில், தமிழகத்தில் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீடு தீர்ப்பாயத்தின் அமர்வை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் சென்னையில் இந்த தீர்ப்பாயத்தை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. குறளகம் உள்ளிட்ட 2 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. அந்த இடங்களை இந்த வாரம் மத்திய அரசு நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த பணி முடிவடைந்தால் வரும் டிசம்பர் 1ம் தேதி சென்னையில் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீடு தீர்ப்பாயத்தின் அமர்வு செயல்படத் தொடங்கும். டெல்லியில் உள்ள முதன்மை அமர்வுக்கு இணையாக இந்த தீர்ப்பாய அமர்வு இருப்பதால் நிறுவன விவகாரங்கள் தொடர்பான வழக்குகளுக்காக இனிமேல் டெல்லி செல்லத் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


Tags : Delhi Session: National Company Law Appeal ,National Company Law Appeal Tribunal Session ,Chennai ,Delhi , National Company Law Appeal in Delhi, Principal Session, Parallel, Chennai
× RELATED சென்னையில் மக்கள் தேவையின்றி வெளியே...