×

உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களிடம் அனுபவ சான்றிதழ் அளிக்க பணம் வாங்கினால் நடவடிக்கை: நிகர்நிலை பல்கலைக்கு அரசு கண்டிப்பு

சென்னை: உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்யும் ஆசிரியர்களிடம் கல்லூரிகளோ, நிகர்நிலை பல்கலைக்கழகங்களோ பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி கல்வித்துறை எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,331 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த பணி நியமனம் கல்வித்தகுதி, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அனுபவ சான்றிதழை கண்டிப்பாக இணைக்க வேண்டும். நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அனுபவ சான்றிதழ் கேட்டால் அவர்களிடம் நிகர்நிலை பல்கலைக்கழகம், கல்லூரி நிர்வாகம் பணம் கேட்கிறார்கள்.

ஒரு ஆண்டு அனுபவ சான்றிதழுக்கு 5 ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாகவும், பணியிலிருந்து விலகியவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 10 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் அனுபவ சான்றிதழ் கேட்பவர்களிடம் ராஜினாமா கடிதத்தையும் சில கல்லுரிகள் கேட்கிறார்களாம். ஏற்கனவே, இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ள நிலையில், அனுபவ சான்றிதழ் கேட்பவர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என்று நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் கல்லூரி கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால், இந்த நிலை தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. குறைந்த அளவு மாதச் சம்பளம் பெறும் தனியார் கல்லூரி  ஆசிரியர்கள் தங்கள் அனுபவ சான்றிதழை பெறுவதற்காக ஒரு மாத சம்பளத்தையே கொடுக்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அனுபவ சான்றிதழுக்கு பணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கல்லூரி கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : teachers ,Assistant Professorship Assistant professor job ,university ,government , Assistant professor job, apply, buy money, the university, government
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்