×

நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் உயிரோடு மீட்கப்படாததற்கு காரணம் யார்?: அமைச்சர்கள், அதிகாரிகளின் முரண்பட்ட உத்தரவால் குழப்பம் ஏற்பட்டதாக தகவல்

சென்னை: நடுக்காட்டுபட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது சிறுவன் சுஜித் உயிரோடு மீட்கப்படாததற்கு அமைச்சர்கள், அதிகாரிகளின் முரண்பட்ட உத்தரவுகள்தான் காரணம் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுஜித் கடந்த 25ம் தேதி மாலை தவறி விழுந்தான். இதுபற்றி கேள்விப்பட்டதும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, குழியில் விழுந்த சிறுவனை எப்படி மீட்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது சிறுவன் சுஜித் 10 முதல் 20 அடி ஆழத்தில்தான் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து செய்தி அறிந்து, அனைத்து தொலைக்காட்சிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. சிறுவன் குழியில் விழுந்து கிடந்ததை படம் எடுத்து நேரடியாக ஒளிபரப்ப தொடங்கினார்கள். இந்த காட்சியை பார்த்த மக்கள் எப்படியாவது சிறுவனை உயிரோடு மீட்டுவிட மாட்டார்களா என்று டிவி முன் அமர்ந்து நடக்கும் சம்பவங்களை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில்தான் சிறுவனை மீட்க பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தப்போவதாக தகவல் வெளியானது. முதலில் சிறுவனின் உடலை கவ்வி பிடிக்கும் இயந்திரம் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த முயற்சி பலன் அளிக்காததால், சிறுவன் படிப்படியாக குழியின் ஆழமான பகுதிக்கு சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. 20 அடியில் இருந்து 30 அடி, 36 அடி, 50 அடி, 60 அடி, 65 அடி என ஆழம் அதிகரிக்க தொடங்கியதால் தமிழக மக்களின்  சோகம் அதிகரித்தது.

தமிழக அமைச்சர்கள் 26ம் தேதி முதல் நடுக்காட்டுபட்டிக்கு வர தொடங்கினர். மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் நடுக்காட்டுபட்டிக்கு சென்றனர். இவர்களை தொடர்ந்து இந்திய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் நவீன கருவிகளுடன் நடுக்காட்டுபட்டிக்கு வந்தனர். பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சம்பவ இடத்துக்கு வந்தார். வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்தில் இரண்டு நாள் முகாமிட்டார். இப்படி அமைச்சர்கள், அதிகாரிகள் குழு அங்கே முகாமிட்டு தொலைக்காட்சிகளுக்கு போட்டி போட்டுக் கொண்டு பேட்டி அளித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது, சிறுவனை எப்படியாவது உயிரோடு மீட்டு விடுவோம் என்று கூறினர். ஆனால் சிறுவனை மீட்க வந்த பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் 150க்கும் மேற்பட்டோர் சிறுவனை மீட்கும் இடத்தில் பரிதாபமாக நின்று கொண்டு இருந்த காட்சியைதான் அனைவரும் டிவியில் பார்க்க முடிந்தது. உண்மையில், ஆபத்து காலத்தில் களத்தில் இறங்கி வேலை செய்ய பயிற்சி பெற்றவர்கள் இவர்கள்தான். ஆனால், இந்த குழுவின் தலைவரோ அல்லது உயர் அதிகாரியோ, போலீஸ் அல்லது தீயணைப்பு துறை அதிகாரிகளோ சிறுவனை மீட்க எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்போகிறோம் என்பது பற்றி ஒருநாள் கூட தொலைக்காட்சியிலோ, பத்திரிகையாளர்களிடமோ தகவல்களை தெரிவிக்கவில்லை. அனைத்து தகவல்களையும் அமைச்சர்களே பத்திரிகையாளர்களுக்கு செய்தியாக கொடுத்து வந்தனர்.

சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3வது நாள் தீபாவளி பண்டிகையாகும். அன்றைய தினம்கூட குடும்பத்தினருடன் சேர்ந்து தீபாவளி பண்டிகை கொண்டாட முடியாமல் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் காவல் துறை, தீயணைப்பு துறை வீரர்கள் நடுக்காட்டுபட்டியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், தாங்கள் யாருடைய உத்தரவுபடி பணியாற்றுகிறோம் என்ற குழப்பத்திலேயே பணியாற்றி வந்ததாக மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் கூறிய அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்து பெயர் ெதரிவிக்க விரும்பாத பேரிடர் மீட்பு குழுவினர் சிலர் தெரிவித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அது வருமாறு: ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்த உடனேயே பேரிடர் மீட்பு குழுவுக்கு தகவல் தெரிவித்திருந்தால் கண்டிப்பாக சிறுவனை உயிரோடு மீட்டிருக்க முடியும். ஆனால், முதல்கட்டமாக அங்கு வந்த அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்த ஆலோசனைபடி குழந்தையை மீட்க முயற்சி எடுத்தனர். அது தோல்வியில் முடிந்தது. அதன்பிறகுதான் எங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மேலும், நாங்கள் இந்த பகுதிக்கு வாகனங்கள் மூலமே அழைத்து வரப்பட்டோம். அதுவும் காலதாமதத்துக்கு காரணம். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது ஒரு சில மணி நேரத்தில் சம்பவ இடத்துக்கு வரும் அளவுக்கு வசதியை அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் சென்ற பிறகுதான் நாங்கள் இங்கு வந்தோம். ஆனாலும், இங்குள்ள சூழ்நிலை வேறுமாதிரியாக இருந்தது. அமைச்சர்கள், அரசியல்வாதிகள் தலையீடு அதிகளவில் இருந்தது. இதனால், எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கும் உயர் அதிகாரிகள் கூட சுயமாக செயல்பட முடியவில்லை. பொதுவாக இதுபோன்ற சம்பவங்களில், எந்த குறுக்கீடும் இல்லாமல் எங்களை பணிசெய்ய விட்டிருந்தால்கூட நான்கு நாட்கள் ஆகி இருக்காது.

மேலும், பேரிடர் மீட்பு குழுவிடம் நவீன ஆயுதங்கள் எதுவும் பெரிய அளவில் இல்லை. சிறுவனை மீட்பதில் அல்லது அவன் சடலத்தை வெளியே கொண்டு வருவதற்கு ஏற்பட்ட காலதாமதத்துக்கு உண்மையில் மீட்புகுழு காரணம் இல்லை என்பதை நாங்கள் உறுதியாக கூறுவோம். அரசியல்வாதிகள், எங்களை சுயமாக பணியாற்ற அனுமதித்திருக்க வேண்டும். அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் முரண்பட்ட உத்தரவுகளால் எங்களால் சுயமாக பணியாற்ற முடியவில்லை என்பதை மட்டும் அழுத்தமாக தெரிவிக்க விரும்புகிறோம் என்றனர்.

சிறுவன் உடல் முழுவதுமாக மீட்கப்பட்டதா?
முகத்தைக்கூட பெற்றோருக்கு காட்டவில்லை: கடந்த 25ம் தேதி மாலை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித், 4 நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சடலமாக மீட்கப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. உண்மையில், ஆழ்துளை குழாயில் சிக்கிய சிறுவனை எப்படி வெளியே கொண்டு வந்தனர் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 85 அடிக்கும் கீழ் சிக்கி இருந்ததாக நேற்று முன்தினம் மாலை வரை அறிவிக்கப்பட்டது.

ரிக் இயந்திரம் மூலம் 55 அடி ஆழத்துக்கு குழிதோண்டப்பட்டதாக நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்டது. பின்னர் துர்நாற்றம் வந்ததாகவும், இதையடுத்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. உண்மையில் சிறுவனின் உடல் முழுவதும் மீட்கப்பட்டதா என்பதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. காரணம், போலீசார் நேற்று அதிகாலை அங்கிருந்த அனைவரையும் அப்புறப்படுத்தி விட்டு, திடீரென சிறுவன் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு, சவப்பெட்டியில் வைக்கப்பட்டு நேரடியாக மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று காலையிலேயே அடக்கமும் செய்யப்பட்டு விட்டது. சிறுவனின் முகத்தைக் கூட பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ காட்டவில்லை. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக பொதுமக்கள் பரபரப்பாக குற்றம் சாட்டியுள்ளனர்.


Tags : Sujith ,ministers , Sujith, 2-year-old boy still alive , ministers , prompt
× RELATED விகேபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது