×

ஆதம்பாக்கத்தில் பயங்கரம் 13 வயது சிறுமி குத்தி படுகொலை: உறவுக்கார வாலிபருக்கு போலீஸ் வலை

ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் 13 வயது சிறுமியை கத்தியால் குத்தி படுகொலை செய்த உறவுக்கார வாலிபரை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வேதவல்லி (50). இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாபு (26), மாதவன் (22) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வேதவல்லியின் தம்பி பூபதிக்கு மோனிஷா, ஷோபனா என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் பூபதி கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்  இறந்தபோது அவரது 2 வயதே ஆன  பெண்குழந்தை ஷோபனாவை மட்டும்  வேதவல்லி எடுத்து வளர்த்து வந்தார். இதில் வேதவல்லியின் மகன் பாபு மட்டும் திருமணம் செய்து கொண்டு தனது மனைவியுடன் கிண்டி  ஈக்காட்டுத்தாங்கலில் வசித்து வருகிறார்.  குடிப்பழக்கத்துக்கு அடிமையான பாபு அடிக்கடி ஆதம்பாக்கம் வந்து தனது  தாயாரிடம் பணம், நகை போன்றவற்றை மிரட்டி பறித்துக்கொண்டு செல்வதை பிழைப்பாகக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை வேதவல்லி தான் வேலைபார்க்கும் ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். அப்போது அயனாவரத்தில் இருந்து தனது தங்கையை பார்க்க அம்பேத்கர் நகருக்கு வந்த மோனிஷா தாழ்ப்பாளை  திறந்து உள்ளே  பார்த்தபோது ஷோபனா ரத்த  வெள்ளத்தில் வெட்டு காயங்களுடன்  கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனது அத்தை வேதவல்லிக்கு தகவல் தந்தார். உடனே அங்கு வந்த வேதவல்லி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின்  உதவியோடு சிறுமி ஷோபனாவை மீட்டு ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  பரிசோதித்த டாக்டர்கள் ஷோபனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  

இதுகுறித்து மருத்துவ மனை மூலம் தகவல் அறிந்த பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகர், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சவுரிநாதன், ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன்  ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று  ஷோபனாவின் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியபோது,  வேதவல்லியின் மூத்த மகன் பாபுதான் வேதவல்லி வீட்டுலிருந்து கோபமாக வெளியேறி சென்றதாக  அங்கிருந்தவர்கள் பார்த்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார்  வேதவல்லியிடம் நடத்திய விசாரணையில், அவரது  தம்பி மகள் ஷோபனா (13) கடந்த 11 ஆண்டுகளாகதான் வளர்த்து வந்ததாகவும் இது தனது மகன் பாபுவிற்கு பிடிக்காது என்றும்,  மேலும் தன்னை  மிரட்டி  பணம், நகை போன்றவற்றை அடிக்கடி  பறித்து செல்வது வாடிக்கையாக கொண்டிருந்தான். மேலும் தற்போது வீட்டை விற்று தனக்கு பணம் கொடுக்கும் படி குடித்து விட்டு அடிக்கடி மிரட்டு வந்துள்ளான். ஆனால் கொலை செய்யும் அளவுக்கு போவான் என்பதை தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியதாக தெரிகிறது.

மேலும் போலீசார் விசாரணையில், நேற்று இதேபோல் பாபு பணம் பறிக்கும் எண்ணத்துடன் வேதவல்லி வீட்டிற்கு வந்ததும்  அங்கு  அவர் இல்லாததால் வீட்டில் உள்ள பொருட்களை  எடுத்து செல்ல முயன்ற போது ஷோபனா அதை தடுத்ததால் கோபத்தில்  வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பல இடங்களிலும் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் அவர் உயிர் பிரிந்துள்ளது.  ஷோபனா உயிரிழந்ததை தெரிந்து கொண்டதும் பாபு நைசாக அங்கிருந்து  வெளியேறி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய பாபுவையும் ஆதம்பாக்கம் போலீசார்  வலை வீசி தேடிவருகின்றனர். தனியாக இருந்த போது நேற்று காலை 11 மணிக்கு பாபு வீட்டிற்கு வந்துவிட்டு சென்றதாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தெரிவித்தனர். தாய் வேதவல்லியிடம் வீடு கேட்க வீட்டிற்கு வந்த பாபு தனியாக இருந்த ஷோபனாவை தாக்கி கத்தியால் குத்தி உள்ளார். இதில் கழுத்து, இடுப்பு, கை, தொடை பகுதிகளில் காயங்கள் இருந்தன. தனியாக இருந்ததால் ஷோபனாவை பாபு கற்பழிக்க முயற்சி செய்தாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.  ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து  தப்பி ஓடிய பாபுவை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Adambakkam ,death , Adambakkam, girl, stabbing
× RELATED ஊரணியில் மூழ்கி சிறுமி பலி