வீடு கட்ட ஒப்புதல் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது

பொன்னேரி:  மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் நமசிவாயம் (62). இவர் வீடு கட்டுவதற்காக ஒப்புதல் வாங்க மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர் பிரசன்னா முத்துவை அணுகினார். அப்போது, அவர் ரூ 5 ஆயிரம் கொடுத்தால் வீடு கட்ட ஒப்புதல் வழங்குவதாக கூறியுள்ளார். அதற்கு நமசிவாயம், பணம் கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். அப்போது, உயர் அதிகாரிகளுக்கு  கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்று பெண் அதிகாரி கண்டிப்புடன்  கூறியுள்ளார். இதையடுத்து, நமசிவாயம் ரூ 4 ஆயிரத்து 500 தருவதாக ஒப்புக் கொண்டார்.

ஆனாலும், லஞ்சப்பணம் கொடுக்க விரும்பாத நமசிவாயம், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி சிவபாதசேகரனிடம்  புகார் செய்தார். அவரது அறிவுரையின்படி நேற்று மாலை மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியில் இருந்த பிரசன்னா முத்துவிடம் ரசாயனம் தடவிக் கொடுத்த பணத்தை நமசிவாயம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த  லஞ்ச ஒழிப்பு போலீசார், பிரசன்னா முத்துவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரை அழைத்து சென்றனர். இது குறித்து  மீஞ்சூர் காவல் நிலைய போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>