×

இயந்திர வாகனம் சாரா போக்குவரத்து திட்டத்தின் கீழ் சென்னையில் முக்கிய பகுதிகளின் 111 கி.மீ சாலை மறு வடிவமைப்பு: நடைபாதை, சைக்கிள் பாதை அமைக்க முடிவு

சென்னை: சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல், காற்று மாசு அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக, முக்கிய சாலைகளில் காலை, மாலை நேரங்களில் கடும் நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால், அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடிவதில்லை. இப்பிரச்னைக்கு தீர்வாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சென்னையில் சைக்கிள் ஷேரிங் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. தற்போது, 38 சைக்கிள் நிலையங்களில் 380 சைக்கிள்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் 50 சைக்கிள் நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட உள்ளன. இதை தவிர்த்து நடைபாதைகளை மேம்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. ரூ.76 கோடி செலவில் 96 கி.மீ பேருந்து வழித்தடத் சாலைகளில் உள்ள நடைபாதைகள் மேம்படுத்தபட உள்ளன. மேலும், தி.நகர் பாண்டி பஜாரில் நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த வாகன போக்குவரத்து திட்டமும் விரைவில் செயல்படுத்தபட உள்ளது.

இந்நிலையில், இயந்திர வாகனம் சாரா போக்குவரத்து திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள 111 கி. மீ சாலை மறு வடிவமைப்பு செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக பிரத்தியேகமான திட்டமும் ஏற்படுத்தப்பட உள்ளது. முக்கியமாக, சென்னையில் உள்ள ரயில் நிலையங்கள், பறக்கும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றை இணைத்து இத்திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. இந்த முதன்மை திட்ட பகுதிகளை அருகில் பல சாலைகளை இணைந்து இரண்டாம் கட்ட திட்டம் தயாரிக்கப்படும். இதில் குறிப்பாக பள்ளிகள், அங்கன்வாடிகள், கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள், நீர்நிலைகள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட தினசரி பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை இணைத்து இந்த திட்டம் உருவாக்கப்படும். அண்ணாநகர், தண்டையார்பேட்டை, ஜார்ஜ் டவுன், திருவொற்றியூர், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி, அடையாறு உள்ளிட்ட 6 இடங்களில் உள்ள 72 சாலைகள் மறு வடிவமைப்பு செய்யப்பட உள்ளன. இதற்கான திட்டம் தயாரிக்கப்படுவதற்கு முன்பாக அந்தப்பகுதியில் 6 வகையான ஆய்வு நடத்தப்பட உள்ளது.

முதலில் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள், முக்கிய சாலைகள், இணைப்பு சாலைகள், சிக்னல்கள், மரங்கள், நடைபாதைகள், மழைநீர் வடிகால்கள் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படும். 2வது இந்த பகுதிகளில் உள்ள காலி இடங்கள் ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வானது எதிர் காலத்தில் பல்வேறு கட்டுமானங்களை மேற்கொள்ள உதவியாக இருக்கும். மூன்றாவதாக போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன பயன்பாடு தொடர்பாக ஆய்வு நடத்தப்படும். நான்காவது நடைபாதை மற்றும் சைக்கிள் பாதைகள் மற்றும் அவற்றின் பயன்பாடு, ஐந்தாவதாக வாகன நிறுத்த வசதி, ஆறாவதாக நடைபாதை வியாபாரிகளுக்கான இடங்கள் உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்படும். இந்த ஆய்வுகள் மூலம் கிடைக்கும் தகவல்களை கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு சாலைகள் மறு கட்டமைப்பு செய்யப்படும். நடைபாதைகள், சைக்கிள் பாதைகள், நடைபாதை இருக்கைகள் சர்வதேச தரத்தில் அமைக்கப்படும். மேலும் நடைபாதை வியாபாரிகளுக்கு தனி இடம், மழைநீர் வடிகால், மின் வயர் உள்ளிட்டவைகளின் இணைப்புகளும் மாற்றியமைக்கப்படும்.

ஆய்வுக் குழு

திட்டம் தயார் செய்யப்படுவதற்கு முன்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளை அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட தொழில்நுட்ப குழு ஆய்வு செய்யும். இதில் மாநகராட்சி ஆணையர், துணை ஆணையர், தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், காவல் துறை துணை ஆணையர், சிஎம்டிஏ, மெட்ரோ ரயில், நெஞ்சாலைத்துறை, சென்னை ஸ்மார்ட் சிட்டி, மின்சார வாரியம், குடிநீர் வாரியம், பிஎஸ்என்எல உள்ளிட்ட துறைகளின் பிரதிநிதிகளும் இருப்பார்கள்.

Tags : areas ,Chennai ,cycle lane ,NVT ,NTC , Motor Vehicle, Chennai, Pavement, Cycle Path
× RELATED சோதனைகளை போக்கிடுவார் சோமசுந்தர விநாயகர்