×

டெங்கு பாதித்த பகுதிகளை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்யக்கோரி வழக்கு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை

சென்னை: டெங்கு பாதிப்பு உள்ள சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேரடியாக ஆய்வு நடத்துமாறு மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்புகள் நேர்ந்து வரும் நிலையில், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தடுக்கவும் நடவடிக்கை கோரியம், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட கோரியும் வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழக அரசு பதில் தருமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் அதன் கூடுதல் செயலர் செல்வகுமார் பதில் மனு தாக்கல் செய்தார். வேலூர், கடலூர், திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மண்டலங்களில் ஏடிஸ் கொசு உற்பத்தியை கண்காணிக்க பூச்சியியல் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுதும் 28,147 பணியாளர்கள் டெங்கு கொசுவை கட்டுப்படுத்துதல், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  டெங்கு காய்ச்சல் பரிசோதனைக்காக தமிழகம் முழுவதும் 125 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு இதுவரை 1.07 கோடி பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் டெங்கு பாதிப்பு உள்ள பகுதிகளில் சென்னை மாநகராட்சி கமிஷனர் நேரடியாக ஆய்வு செய்ய உத்தரவிடக்கோரி வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் ஒரு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்னும் டெங்கு பரவுவதற்கான வாய்ப்புள்ள இடங்கள் அதிகம் உள்ளன. இந்த இடங்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. எனவே, சென்னையில் டெங்கு பாதிப்புள்ள இடங்களில் மாநகராட்சி கமிஷனரை நேரில் ஆய்வு செய்யுமாறு உத்தரவிட வேண்டும். மேலும், டெங்கு ஒழிப்பு செயல்பாடுகளில் கடமையை செய்யத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Tags : commissioner ,areas , Dengue, Corporation Commissioner, Inspection
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...