பரபரப்பு தகவல்களை வெளியிட்டது அமெரிக்க ராணுவம் பாக்தாதி உடல் கடலில் வீசப்பட்டது: ஐஎஸ் அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்?

வாஷிங்டன்: ஒசாமா பின்லேடனைப் போலவே, ஐஎஸ் தீவிரவாத தலைவன் அபு பக்கர் அல் பாக்தாதியின் உடல் பாகங்களையும் சர்வதேச சட்ட விதிமுறைப்படி கடலில் அடக்கம் செய்து விட்டதாக அமெரிக்க ராணுவம் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. பாக்தாதி இறந்ததைத் தொடர்ந்து, ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு புதிய தலைவன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிரியாவில் பல்வேறு அட்டூழியங்களையும், உலகம் முழுவதும் பல்வேறு நாச வேலைகளும் செய்து வந்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவன் அபு பக்கர் அல் பாக்தாதி. அதிபயங்கர தீவிரவாதியான இவனை, சிரியாவின் இட்லிப் மாகாணம் பரிஷா கிராமத்தின் அருகே அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு படை கடந்த சனிக்கிழமை சுற்றிவளைத்தது. அப்போது, வீட்டில் இருந்த ரகசிய சுரங்கப்பாதையில் அவன் ஒளிய முயற்சித்தான். ஆனால், அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த மோப்ப நாய், சாதுர்யமாக மோப்பம் பிடித்து அவனை சுற்றிவளைத்தது. உடனே, பாக்தாதி தனது 3 மகன்களுடன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டான். அங்கே டிஎன்ஏ பரிசோதனை செய்து பாக்தாதி இறந்ததை அமெரிக்க ராணுவம் உறுதி செய்து, அதிரடி ஆபரேஷனை வெற்றிகரமாக நிறைவேற்றியது. இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்து, உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதே சமயம், இந்த விஷயத்தில் பல்வேறு கேள்விகளும் சந்தேகங் களும் கிளப்பப்படுகின்றன. இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகனில் ராணுவ ஜெனரல்  மார்க் மில்லே நேற்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பாக்தாதியின் விஷயத்தில் அமெரிக்க ராணுவம் சர்வதேச சட்ட விதிகளின்படி நடந்துள்ளது. அவனது உடல் பாகங்களை டிஎன்ஏ மூலம் பரிசோதித்து உறுதி செய்த பின் அவற்றை சர்வதேச ஆயுத மோதல் சட்டத்தின்படி கடலில் வீசி உள்ளது. அது எங்கு என்பதை வெளிப்படுத்த முடியாது. இதேபோல், கடந்த 2011ல் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் அதிரடி ஆபரேஷனில் கொல்லப்பட்ட போதும் கூட, அவனது உடல் பாகங்கள் கடலில் வீசப்பட்டன. பாக்தாதி தனது கடைசி நிமிடங்களில் கதறி அழுததாகவும், வெலவெலத்து போனதாகவும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி எனக்கு தெரியாது. அந்த விஷயம் அதிரடி தாக்குதலில் ஈடுபட்ட வீரர்களிடமிருந்து அதிபருக்கு கிடைத்த நேரடி தகவலாக இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாக்தாதி இறந்ததால் ஐஎஸ் அமைப்பை இனி ஒருங்கிணைப்பதில் சிக்கல் நிலவும் என உலக நாடுகள் மகிழ்ச்சி அடையும் நிலையில், தற்போது அந்த அமைப்புக்கு புதிய தலைவன் நியமிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. ஜிகாதி குழுவின் புதிய தலைவராக ஈராக்கின் முன்னாள் ராணுவ அதிகாரியான அப்துல்லா கர்தாஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவன், கர்தாஷ் ஹஜ்ஜி அப்துல்லா அல்-அபாரி என இனி அழைக்கப்படுவார் என ஜிகாதிகள் அறிவித்துள்ளதாக சில சர்வதேச ஊடகங்கள் கூறி உள்ளன. அப்துல்லா கர்தாஷ், ஈரான் முன்னாள் அதிபர் சதான் உசேன் பதவிக் காலத்தில் ராணுவத்தில் முக்கிய பங்கு வகித்தவன். ‘அழிப்பவன்’ என சதாம் உசேனால் பாராட்டப்பட்டவன் கர்தாஷ். பாக்தாதியுடன் 15 வருட காலம் நெருங்கிய பழக்கம் கொண்டவன். 2000ம் ஆண்டில் ஈராக்கில் அமெரிக்க முகாமில் பாக்தாதியுடன் கர்தாசும் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டவன். கர்தாஷ் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ள சர்வதேச ஊடகங்கள், ‘‘தூங்கிக் கொண்டிருந்த சாத்தானை அமெரிக்கா தாக்கி விட்டது. இனி அது எழுந்து மீண்டும் நாசவேலைகளை அரங்கேற்றப் போகிறது. ஐரோப்பா, அமெரிக்கா, சிரியா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் ஐஎஸ் அமைப்பின் அராஜகங்கள் நிகழக்கூடும்’’ என எச்சரித்துள்ளன.

நெருங்கிய கூட்டாளிகள் சிக்கினர்

அமெரிக்க ராணுவ ஜெனரல் மார்க் மில்லே தனது பேட்டியில் மேலும் கூறுகையில், ‘‘பாக்தாதி பதுங்கியிருந்த கட்டிடத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அது எந்தமாதிரியான ஆவணங்கள், எத்தனை என்ற விவரங்களை வெளியிட விரும்பவில்லை. அவை மிக மிக ரகசியமான ஆவணங்கள். மேலும், அந்த வீட்டில் இருந்து பாக்தாதியின் நெருங்கிய கூட்டாளிகள் இருவர் உயிருடன் பிடிபட்டுள்ளனர். அவர்கள் அமெரிக்க வீரர்கள் கட்டுப்பாட்டில் உள்ளனர்,’’ என்றார்.

ஹீரோவான நாயின் புகைப்படம் வெளியீடு

அமெரிக்க ராணுவ வீரர்களுடன் அதிரடி தாக்குதலில் பங்கேற்ற ராணுவ மோப்ப நாய் தான், பாக்தாதியை ஓட ஓட விரட்டி சுற்றிவளைத்து கதற விட்டுள்ளது. பாக்தாதி குண்டுகளை வெடிக்கச் செய்ததில் அந்த நாய் காயமடைந்துள்ளது. சிறப்பாக செயல்பட்ட நாயை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெகுவாக பாராட்டி உள்ளார். ஹீரோ என்றும் புகழ்ந்துள்ளார். அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ள டிரம்ப், நாயின் பாதுகாப்பு கருதி பெயரை வெளியிடவில்லை.

பாக்தாதி உள்ளாடையை எடுத்து வந்த உளவாளி

குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளின் மூத்த ஆலோசகரான பொலட் கேன் கூறுகையில், ‘‘கடந்த மே 15ம் தேதி முதல் பாக்தாதியின் அனைத்து நடவடிக்கைகளையும் குர்திஷ் உளவுப்பிரிவு உன்னிப்பாக கவனித்து அமெரிக்காவின் சிஏஐக்கு தகவல் தந்து வந்தது. பாக்தாதி அடிக்கடி இருப்பிடத்தை மாற்றுவான். சமீபத்தில் அவன் வீட்டிற்குள் நுழைந்த எங்கள் உளவாளி, பாக்தாதியின் 2 உள்ளாடைகளை எடுத்து வந்தான். அவை, டிஎன்ஏ பரிசோதனை மூலம் பாக்தாதி இறந்ததை 100 சதவீதம் உறுதி செய்ய மிகவும் உதவியாக இருந்தன,’’ என்றார்.

Tags : US Army ,sea ,Baghdadi , US military, Baghdadi body, IS organization
× RELATED உடலை காக்கும் கேடயம் வெங்காயம்