×

இந்தியா, சவுதி போன்ற நாடுகளை உலக பொருளாதாரம் சார்ந்துள்ளது: ரியாத்தில் மோடி கருத்து

ரியாத்: உலக பொருளாதாரத்தின் ஸ்திரமற்ற நிலையை குறிப்பிட்ட பிரதமர் மோடி, ‘‘இந்தியா, சவுதி அரேபியா போன்ற வளரும் நாடுகளின் பாதையை உலக பொருளாதாரம் வலுவாக சார்ந்துள்ளது,’’ என கூறி உள்ளார். சவுதி அரேபியாவில் நடக்கும் ‘எதிர்கால முதலீடுக்கான முயற்சி’ என்ற உயர்மட்ட பொருளாதார ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் இரவு ரியாத் சென்றடைந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பொருளாதார ஆலோசனை கூட்டத்தை ஒட்டி, அவர் சவுதியின் முக்கிய துறை அமைச்சர்கள், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை சந்தித்து பேசினார். இதில் எரிசக்தி, வேளாண், தொழிலாளர் நலன் மற்றும் நீர் தொழில்நுட்பங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பொருளாதார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘வரும் 2024ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை எட்ட இலக்கு கொண்டுள்ள இந்தியாவில் உலக முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்யவும் முதலீடு செய்வதற்குமான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன’’ என அழைப்பு விடுத்தார். 3 நாட்கள் நடக்கும் இக்கூட்டத்தில் 30 நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட 6,000 பேர் பங்கேற்கின்றனர்.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 83 சதவீதத்தை இறக்குமதி செய்து வருகிறது. இதில் ஈராக்குக்கு பிறகு அதிக கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நாடாக சவுதி அரேபியா உள்ளது. மேலும், இந்தியா, சவுதி இடையேயான வர்த்தக உறவு சமீபகாலமாக வலுவடைந்து வருகிறது. இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக சவுதி அரசு கடந்த மாதம் அறிவித்தது. இதுதொடர்பாக பிரதமர் மோடியின் பிரத்யேக பேட்டியை சவுதியின் அரபி நியூஸ் பத்திரிகை சிறப்பு பேட்டியை பிரசுரித்துள்ளது. அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: உலக அளவில் பலதரப்பட்ட வர்த்தக அமைப்புகளில் ஸ்திரமற்ற நிலை நிலவி வருகிறது. உலக பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. இந்த நிலையில், இந்தியா, சவுதி அரேபியா போன்ற வளரும் நாடுகளின் பாதையையே உலக பொருளாதாரம் வலுவாக சார்ந்துள்ளது. ஜி20 அமைப்பிலும், இந்தியாவும் சவுதியும் இணைந்து செயலாற்றி சம அளவிலான, நிலையான வளர்ச்சியை மேம்படுத்துகின்றன.

இந்தியாவில் தொழில் செய்வதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதற்கும்,  உலகின் வளர்ச்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் முக்கிய உந்துசக்தியாக திகழ்வதை உறுதி செய்வதற்கும் பல்வேறு பொருளாதார சீர்த்திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். அதே போல, 2030ம் ஆண்டை எதிர்நோக்கிய முதலீடு முயற்சிகள் போன்ற சவுதியின் திட்டங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெறும் வர்த்தக கூட்டாளிகளாக இருந்த இந்தியாவும் சவுதியும் இன்று நெருங்கிய நட்பு நாடுகளாகி உள்ளன. இந்தியாவுக்கும், சவுதிக்கும் ஒரே மாதிரியாக அண்டைநாடுகளால் பாதுகாப்பு பிரச்னைகள் நிலவுகின்றன. அதே சமயம், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை, பாதுகாப்பு விவகாரங்கள் போன்றவற்றில் இந்தியா, சவுதி இடையேயான ஒத்துழைப்பு மேம்பட்டு வருவதும் மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

மோடி பயணத்தின் முக்கிய நிகழ்வாக, சவுதி மன்னர் சல்மான் மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோருடன்  பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இருதரப்பு உறவுகள், எண்ணெய் விநியோகம், முதலீடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக, இரு தரப்பு உறவு மற்றும் வர்த்தகத்தை வலுப்படுத்த மூலோபய கூட்டு கவுன்சில் அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பாதுகாப்பு, எண்ணெய் சுத்திகரிப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு மைய தாக்குதலுக்கு பிறகும் இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெயை தந்ததற்காக பிரதமர் மோடி சவுதி மன்னருக்கு நன்றி தெரிவி்த்தார்.

Tags : countries ,Riyadh ,Saudi ,India ,Modi , India, Saudi, Economy, Riyadh, Modi
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...