×

ரஜினி உட்பட திரையுலகினர் இரங்கல்

சென்னை: சிறுவன் சுஜித் மரணம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘சுஜித்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அந்த குழந்தையின் ஆத்மா சாந்தி அடையட்டும். சுஜித்தின் பெற்றோருக்கு என்  ஆழ்ந்த அனுதாபங்கள்’’ என்று தெரிவித்துள்ளார். விஷால் கூறும்போது, ‘சுஜித்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இதுபோன்ற ஒரு சம்பவம் இனி தொடராது என நம்புவோம்’ என்றார். வீடியோ மூலம் இரங்கல் கவிதை வெளியிட்ட பாடலாசிரியர் வைரமுத்து, ‘உன்னை மீட்கக் கையில் கயிறு கட்டிப்  பார்த்தோம். ஆனால், உன் கால்  விரலில் கயிறு கட்டி விட்டதே மரணம். எவன் அவன் பின் கூட்டிப் பிறந்த குழந்தைக்கு, முன்கூட்டியே சவக்குழி  வெட்டியவன். உலகின் நீளமான சவக்குழி இதுதானோ என்னவோ, நடக்கக் கூடாதது நடந்தேறிவிட்டது. மரணத்தில் பாடம் படிப்பது மடமை சமூகம். மரணத்திலும் கல்லாதது அடிமை சமூகம். ஏய்.. மடமை சமூகமே.. வாழ்வின் பக்கவிளைவு மரணமெனில், மரணத்தின்  பக்கவிளைவு ஞானம் தானே. அந்த சவக்குழிக்குள் மண் விழுவதற்குள், அத்தனை அபாய  குழிகளையும் மூடிவிடு. அந்த மெழுகுவர்த்தி அணைவதற்கு அத்தனை கண்ணீரையும் துடைத்துவிடு. ஏய் வானம் பார்க்கும் தொழில்நுட்பமே, சற்று குனிந்து பாதாளம் பார். இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சு சாவுகள்’ என கூறியுள்ளார்.

நடிகர் விவேக், ‘கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு... சுஜித், உன் உடலை எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம். எங்களை யார் எடுப்பது?’’ என கூறியுள்ளார். நடிகர் விமல் கூறும்போது, ‘எனது சொந்த ஊர் மணப்பாறை. எங்கள் ஊருக்கு அருகில்தான் சிறுவன் ஊர். தகவல் அறிந்து பதற்றத்துடன் சம்பவ இடத்திற்கு சென்று காத்திருந்தேன். இந்த முறை எங்கள் பகுதியில் யாரும் தீபாவளி கொண்டாடவில்லை. இது சோகமான தீபாவளி ஆகிவிட்டது’ என்றார். ‘சுஜித்தின் பெற்றோருக்கு... ஆதரவற்ற ஒரு குழந்தையை எடுத்து சுஜித் என பெயரிட்டு வளர்க்க முன்வாருங்கள். அந்த குழந்தைக்கான கல்வி செலவுகளை நான் ஏற்கிறேன்’ என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். நடிகர்கள் விஷ்ணு விஷால், ஜி.வி.பிரகாஷ், கருணாகரன், மனோபாலா, இசை அமைப்பாளர் டி.இமான், பாடலாசிரியர் அருண் பாரதி, நடிகைகள் ஜனனி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் சுஜித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Rajinikanth Rajini ,filmmakers , Rajini, filmmakers, condolences
× RELATED நடிகர் சங்கம் மற்றும் தமிழ்த்...