×

குழந்தை சுஜித்தை மீட்க உரிய தொழில்நுட்பம் இல்லாதது தேசிய அவமானம்: தலைவர்கள் இரங்கல்

சென்னை: குழந்தை சுஜித்தை மீட்க நம்மிடையே உரிய மீட்புத் தொழில்நுட்பம் இல்லாதது தேசிய அவமானம் என அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன்: குழந்தை சுஜித் மரணம் சாதாரணமானது அல்ல. பிஞ்சு குழந்தையின் துடிதுடித்த மரணம் பல பேர் இருந்து போதித்த பாடங்களை விட இறந்து பல பாடங்களை போதித்துள்ளது. மீண்டும் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க நாம் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: இந்தியாவிலேயே ஆழ்துளை கிணறுகள் விபத்தில் தமிழகம் முன்னிலை வகிக்கும் மாநிலமாக இருப்பது மிகுந்த வேதனையை தருகிறது. வருமுன் காப்பு என்பது மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: சுஜித்தை உயிருடன் மீட்க தமிழக அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மேற்கொண்ட முயற்சிகளை குறை கூற முடியாது. ஆனாலும், சிறுவனைக் காப்பாற்ற முடியாதது சோகமே. இத்தகைய சூழல்களை சமாளிக்க புதிய தொழில்நுட்பங்களும், கருவிகளும் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: சுஜித்தின் தாய் கலாமேரி 12ம் வகுப்பு பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். இவருக்கு அரசு ஒரு பணி வழங்கி, அவரது குடும்பத்திற்கு நிதி வழங்கி ஆதரவு காட்ட வேண்டும்.
 
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இதுபோன்ற விபத்துகளை தடுக்க, மீட்க புதிய தொழில்நுட்பம், நவீன இயந்திரங்கள் தேவை. இதனை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்: . ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை உடனடியாக மீட்பதற்கான தொழில்நுட்பத்தையும் அதற்கான கருவிகளையும் இயந்திரங்களையும் மத்திய, மாநில அரசுகள் விரைந்து உருவாக்கிட வேண்டும்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து ஆழ்துளையில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: ஆழ்துளை குழிகளில் நிகழும் உயிரிழப்பில் இதுவே கடைசியாக இருக்கட்டும்.
 
இதேபோன்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சமத்துவ மக்கள் கழக தலைவர் நாராயணன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Sujith ,Leaders , Baby Sujit, technology, national humiliation, leaders, condolences
× RELATED விகேபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது