×

ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் சுஜித் பலி எதிரொலி அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

‘உயிர் பலி வாங்கினால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா’ என நீதிபதி வேதனை

சென்னை: அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உயிர்ப்பலி வேண்டுமா, உயிர்ப்பலி ஏற்பட்டால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா என்று தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், ஆழ்துளை கிணறுகள், விதிமீறல்கள் தொடர்பாக பதில் தருமாறும் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் சுஜித் பலியான சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்துளை கிணறு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வகுத்திருந்தும் அதை அதிகாரிகள் கடைபிடிக்காததால் இந்த பலி சம்பவம் நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ், உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுபட்டியில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியாகியுள்ளான். அவன் குழிக்குள் விழுந்தவுடன் அவனை மீட்க பல்வேறுவிதமான முறைகளை அரசு பின்பற்றியது. ஆனால், அனைத்திலும் தோல்வியே மிஞ்சியது. ஏற்கனவே, இதுபோன்ற பல சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. கடந்த 2012ல் திருவண்ணாமலையில் ஒரு குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவத்தையடுத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆழ்துளை கிணறுகள் அனுமதி, பாதுகாப்பு தொடர்பாக உரிய வழிமுறைகளுடன் சட்டம் இயற்றுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

 அதன் அடிப்படையில், தமிழ்நாடு பஞ்சாயத்துகள் விதிகள் சட்டம் 2015 என்ற சட்டத்தை தமிழக அரசு  கொண்டுவந்தது. இந்த சட்டம் 2015 பிப்ரவரி 18 முதல் அமலுக்கு வந்தது. அதில் பல்வேறு வழிகாட்டுதல்கள் கூறப்பட்டிருந்தன. ஆனால், அந்த சட்டத்தையும் அதிகாரிகள் அமல்படுத்தவில்ைல. பல இடங்களில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் உள்ளன. வேலூரில் சுமார் 2000 பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் மழைநீர் சேகரிப்பு திட்டமாக மாற்றப்பட்டுள்ளன. அதுபோன்ற செயல்களைக்கூட அதிகாரிகள் செய்யவில்லை. சிறுவனை மீட்க எடுத்த நடவடிக்கையில் சரியான வழிமுறைகளை பின்பற்றவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள டீம் தக்ஸா என்ற அமைப்பை சம்பந்தப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்றிருக்கலாம். மீட்புக் குழுக்கள் அந்த இடத்திற்கு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற குறைபாடுகளால்தான் சிறுவனை மீட்க முடியவில்லை.

எனவே, ஆழ்துளை கிணறு தோண்டுவது, பாதுகாப்பு, தவறு செய்தவர்களுக்கான தண்டனை உள்ளிட்ட பல்வேறு சரத்துகள் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதுபோன்ற அவசர காலத்தில் மீட்புக் குழு செல்வதற்கு ஏதுவாக தமிழக அரசின் ஹெலிகாப்டரை பயன்படுத்துமாறும், அந்த ஹெலிகாப்டரின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். சிறுவனை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விடுமுறை நாளான நேற்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததிலிருந்து இறுதிவரை தொடர் நேரலை செய்ததை தவிர எந்த ஊடகங்களும் சமூக பொறுப்புடன் செயல்படவில்லை. மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து ஊடகங்களும் முயற்சிக்க வேண்டும். விழிப்புணர்வு கொண்டு வருவதில் ஊடகங்கள்தான் அதிக பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனும் சமூக  பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.  அரசு கொண்டு வந்த விதிகள் பின்பற்றப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. பலியான சுஜித் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

ஆழ்துளை கிணறு அமைக்க வழங்கப்பட்ட அனுமதிகள் குறித்த ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா, இதுவரை எத்தனை ஆழ்துளை கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, பயன்படுத்தப்படாமல் உள்ள கிணறுகளின் எண்ணிக்கை என்ன, விதிகளை மீறியவர்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று சரமாரி கேள்விகளை எழுப்பினர். இதையடுத்து இந்த வழக்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளும் சேர்க்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர். பின்னர் ஆழ்துளை கிணறுகள் அனுமதி, விதிமீறல் நடவடிக்கை உள்ளிட்ட தகவல்கள் அனைத்தையும், சிறுவன் பலியான சம்பவம் குறித்தும் விரிவான பதிலை நவம்பர் 21ம் தேதிக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Tags : Sujith ,government , Boy sujith, sacrifice echo, government, icourt, volley question
× RELATED விகேபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது