×

1 கிலோ பிளாஸ்டிக் தந்தால் ஒருவேளை உணவு இலவசம்: ஒடிசாவில் அதிரடி திட்டம்

கோராபுட்: ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து கொடுக்கும் மக்களுக்கு, ஒருவேளை உணவை இலவசமாக வழங்கும் திட்டம்  ஒடிசாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் ‘ஆஹார்’ என்ற இலவச உணவு வழங்கும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்படி நகர்ப்புற ஏழைகளுக்கு ரூ.5.க்கு துவரம் பருப்பு கூட்டுடன் சாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்துடன் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த, ‘கோட்பேட் கவுன்சில்’ என்ற அமைப்பு முடிவு செய்தது. இதற்காக புதுமையான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் முதன்மை அதிகாரி அலோக் சமன்தராய் கூறியதாவது:
பிளாஸ்டிக் கழிவுகள் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகள், பறவைகளின் உயிருக்கும் கேடு விளைவிக்கிறது. இந்த கழிவுகளை மழை நீர் பாயும் வடிகால்களை அடைத்து கொண்டு சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கின்றன.

எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், பொதுமக்களின் ஆரோக்கியத்தை பேணும் வகையிலும் ‘கோட்பேட் கவுன்சில்’ புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி  பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகளை ஒரு கிலோ அளவுக்கு கொண்டு வந்து கொடுக்கும் நபர்களுக்கு ஆஹார் திட்டத்தின் கீழ் இலவசமாக ஒருவேளை உணவு வழங்கப்படும். இந்த திட்டம் நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டுள்ளது.
முதல்நாளில் மட்டும் 10 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் பெற்றுக் கொள்ளப்பட்டு அதற்கு ஏற்ப 10 உணவு பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த நகரம் பாலிதின் கழிவுகள் இல்லாத நகரமாக அடுத்த சில வாரங்களில் மாற்றப்பட்டு விடும். பிளாஸ்டிக் கழிவுகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தொடர்பாக நகரின் பல்வேறு பகுதிகளில் பேனர்கள், விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Odisha , Plastic, maybe food, free, Odisha
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை