ஆந்திர மாநிலத்துக்கு புது தலைநகரம் அமைப்பது பற்றி மக்கள் யோசனை தெரிவிக்கலாம்: கமிட்டி அறிவிப்பு

திருமலை: ஆந்திர மாநில தலைநகர் அமைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில பிரிவினைக்குப் பிறகு சந்திரபாபு தலைமையிலான அரசு குண்டூர் மாவட்டம், வெலகம்புடியை  சுற்றியுள்ள கிராமங்களை மையமாகக் கொண்டு அமராவதி தலைநகர் அமைக்கப்படும் எனக்கூறி அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் ஜெகன்மோகன் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, ‘ கிருஷ்ணா நதியை  ஒட்டியுள்ள இந்த பகுதியில் அமராவதி தலைநகர் அமைப்பதன் மூலம்  இரட்டிப்பு செலவு செய்வதோடு 300 நாட்களும் விவசாயம் செய்து வரக்கூடிய விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.

எனவே, இந்த இடத்திற்கு மாற்றாக வேறு இடம் சிறந்தது,’ என முடிவு செய்யப்பட்டது. இது பற்றி ஆராய்வதற்காக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சி.என்.ராவ்  தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 6 வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. இந்நிலையில், புதிய தலைநகரத்தை அமராவதியில் அமைக்க வேண்டுமா அல்லது வேறு எந்த இடத்தில் அமைத்தால் நன்றாக இருக்கும் என்பது பற்றி மக்களிடமும் கருத்து கேட்க, இக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக, பொதுமக்கள் நவம்பர் 12ம் தேதிக்குள் expertcommittee2019@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவோ அல்லது  விஜயவாடா பாத்தமெட்டாவில் உள்ள எக்ஸ்பெக்ட் கமிட்டி அலுவலகத்திற்கு கடிதம் மூலமாகவோ ஆலோசனை மற்றும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : announcement ,capital ,Andhra Pradesh: Committee , Andhra State, New Capital, People, Committee
× RELATED மாணவர்களுக்கு ஒழுக்கம், தூய்மை...