×

வங்கதேச கேப்டன் ஷாகிப் ஹசனுக்கு 2 ஆண்டு தடை: ஐசிசி அதிரடி நடவடிக்கை

துபாய்: கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் அணுகியது குறித்து ஊழல் தடுப்புக் குழுவினருக்கு தகவல் தரத் தவறியதால், வங்கதே அணி கேப்டனும் ஒருநாள் போட்டிகளில் உலகின் நம்பர் 1 ஆல் ரவுண்டருமான ஷாகிப் அல் ஹசனுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஊழல் தடுப்புக் குழு விதிமுறைகளின்படி, சூதாட்ட தரகர்கள் அணுகி பேரம் பேச முயற்சித்தால் அது குறித்து சம்பந்தப்பட்ட வீரர் உடனடியாகத் தகவல் தர வேண்டும். 2018ல் வங்கதேசம், ஜிம்பாப்வே, இலங்கை அணிகளிடையே நடந்த முத்தரப்பு தொடர், 2018 ஐபிஎல் சீசனில் ஐதராபாத் - பஞ்சாப் அணிகளிடையே நடந்த போட்டியின்போது ஷாகிப் அல் ஹசனை சூதாட்ட தரகர்கள் அணுகியுள்ளனர். இது குறித்து அவர் ஊழல் தடுப்புக் குழுவுக்கு தகவல் தரத் தவறிவிட்டார். இது தொடர்பாக ஐசிசி நடத்திய விசாரணையில் தனது தவறை ஷாகிப் ஹசன் ஒப்புக்கொண்டதை அடுத்து, அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அவருக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்படுவதாக ஐசிசி நேற்று அறிவித்தது.

தவறை ஒப்புக்கொண்டதால் இந்த 2 ஆண்டு தடையில் ஓராண்டு குறைக்கப்படுவதாகவும், 2020 அக்டோபர் 29ல் இருந்து அவர் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் களமிறங்க அனுமதிக்கப்படுவார் என்றும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஷாகிப் கூறுகையில், ‘நான் மிகவும் விரும்பும் விளையாட்டில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அதே சமயம் தகவல் தராமல் இருந்தது எனது தவறு தான். அதை முழுவதுமாக ஒப்புக் கொள்கிறேன். கிரிக்கெட்டில் ஊழலுக்கும் முறைகேட்டுக்கும் இடமில்லை. இதில் எனது கடமையை செய்யத் தவறிவிட்டேன். ஐசிசியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதுடன், இளம் வீரர்கள் இதுபோன்ற தவறுகளை செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய உதவுவேன்’ என்றார். ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் நடைபெற உள்ள நிலையில், ஷாகிப் ஹசனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது வங்கதேச அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Shakib Hassan ,ICC ,Bangladesh , Bangladesh captain, Saqib Hassan, ban, ICC
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது